Ashes 2023, Eng vs Aus: காயத்தால் ஆஸி., பவுலர் லயன் விலகல் - சிக்கலை சமாளிக்க கைகொடுக்கும் இரண்டு ஸ்பின்னர்கள்
Jul 01, 2023, 02:53 PM IST
காயத்தால் களத்தை விட்டு வெளியேறிய ஆஸ்திரேலியா ஸ்பின்னர் நாதன் லயன், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தே விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இரண்டு பார்டைம் ஸ்பின்னர்களை வைத்து இரண்டாவது இன்னிங்ஸை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை அணிக்கு ஏற்பட்டுள்ளது.
ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 416 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 110 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 325 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஓபனிங் பேட்ஸ்மேன் டக்கெட் அதிகபட்சமாக 98 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 91 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.
ஓபனிங் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா 58, ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இதற்கிடையே ஆட்டத்தின் இரண்டாவது நாளில் பீல்டிங் செய்தபோது ஆஸ்திரேலியா ஸ்பின் பவுலர் நாதன் லயன் காயமடைந்தார். வலது கால் பின் தசை பகுதியில் திரிபு ஏற்பட்டதால் நடப்பதற்கு கூட சிரமம் அடைந்த நிலையில் அவர் உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார்.
முக்கிய ஸ்பின்னரான லயன் அணியில் இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக, பார்டைம் பவுலர் ட்ராவிஸ் ஹெட் பவுலிங் செய்ய பயன்படுத்தப்பட்டார். இதற்கு பலன் அளிக்கும் விதமாக ஹெட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டத்தின் மூன்றாவது நாள் கையில் ஊன்றுகோல் உதவியுடனே மைதானத்துக்கு வந்தார் லயன். இதனால் அவர் போட்டியில் மேலும் தொடர்வது குறித்து கேள்வி எழுந்தது.
"நாதன் லயனுக்கு கால் பின்பகுதி தசை பகுதியில் திரிபு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி முடிந்ததும் அவர் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வார். இந்த தொடரில் எஞ்சிய போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்" என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் அவர் இந்த போட்டியில் மேலும் தொடரமாட்டார் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் இல்லாத நிலையில் முதல் இன்னிங்ஸில் பார்டைம் பவுலரான ஹெட் பயன்படுத்தப்பட்டார். தற்போது ஹெட்டுடன், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்பின் பவுலர்களாக செயல்படுவார்கள் என தெரிகிறது.
முக்கிய பவுலர் அணியில் இல்லாத நிலையில், இரண்டு பகுதி நேர ஸ்பின்னர்களை வைத்து சமாளிக்கும் சூழ்நிலை ஆஸ்திரேலியா அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இதுவொரு சாதகமான விஷயமாகவே அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்