Ashes 2023: மழையால் பாதி நாள் போட்டி வாஷ்அவுட்! 20 ஓவரில் ஆஸி., காலி - இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 224 ரன்கள் தேவை
Jul 09, 2023, 01:44 AM IST
மூன்றாம் நாள் போட்டியில் முதல் இரண்டு செஷன்கள் மழையால் கைவிடப்பட்ட நிலையில் மூன்றாவது செஷனில் 20 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த நிலையில் ஆஸ்திரேலியா அணி கூடுதலாக 106 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 251 ரன்கள் ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து 237 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஆஸ்திரேலியா கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்தார். இரு அணிகளும் தனது முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாள் முடிவுதற்குள்ளாகவே முடித்துக்கொண்டன.
இதைத்தொடர்ந்து, 26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. அப்போது டிராவிஸ் ஹெட் 18, மார்ஷ் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து மூன்றாம் நாள் ஆட்டமான இன்று தொடர் மழை காரணமாக முதல் இரண்டு செஷன்கள் கைவிடப்பட்டன. பின்னர் மூன்றாவது செஷனில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர் மட்டும் பேட் செய்து கூடுதலாக 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஹெட் மட்டும் நிலைத்து நின்று பேட் செய்து 77 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதனால் முதல் இன்னிங்ஸ் 26 முன்னிலையுடன் சேர்த்து, ஆஸ்திரேலியா அணி 250 ரன்கள்முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த அந்த அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 224 ரன்கள் தேவைப்படும் நிலையில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
இன்னும் இரண்டு நாள் போட்டி மீதமிருக்கும் நிலையில் ஆட்டத்தின் நான்காவது நாள் முடிவு தெரிந்துவிடும். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியே அணி 2-0 என வென்று முன்னிலை விகிக்கிறது.
அந்த வகையில் இங்கிலாந்துக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்