Ashes 2023, 2nd Test: எந்த வகையிலும் எடுபடாத இங்கிலாந்தின் திட்டம்! ஸ்மித் நங்கூர இன்னிங்ஸ் - வலுவான நிலையில் ஆஸி.,
Jun 29, 2023, 12:06 PM IST
ஆஷஸ் தொடர் இரண்டாவது டெஸ்ட் முதல் நாளில் இங்கிலாந்தின் முடிவும், திட்டமும் அவர்களுக்கு எந்த வகையில் பலம் அளிக்காமல் போயுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா வலுவான நிலையில் இருந்து வருகிறது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு நல்ல தொடக்கத்தை அமைந்து கொடுத்தனர் ஓபனிங் பேட்ஸ்மேன்களான வார்னர் - கவாஜா. முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த கவாஜா, மிகவும் பொறுமையாக பேட் செய்து 17 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
முதல் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 73 ரன்கள் குவித்தனர். கொஞ்சம் அதிரடியாக பேட் செய்து விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்ட வார்னர் அரைசதம் அடித்து, 66 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஓபனிங் பேட்ஸ்மேன் இருவரின் விக்கெட்டையும் இங்கிலாந்து பவுலர் டங் வீழ்த்தினார்.
வார்னர் - கவாஜாவை தொடர்ந்து லபுஸ்சேன் - ஸ்மித் ஜோடி இங்கிலாந்து பவுலர்களுக்கு தலைவலி கொடுக்கும் விதமாக பேட் செய்தனர். இருவரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். லபுஸ்சேன் 47 ரன்களில் அவுட்டானார்.
இதையடுத்து பேட் செய்ய வந்த டிராவிஸ் ஹெட், ஆரம்பம் முதலே அதிரடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுப்ட்டார். விரைவாக அரை சதத்தை பூர்த்தி செய்த ஹெட் 73 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஹெட்டுக்கு அடுத்தபடியாக வந்த க்ரீன் டக்அவுட்டானார்.
இதற்கிடையே நிதானமாக ரன்களை குவித்து வந்த ஸ்மித் அரைசதத்தை பூர்த்தி செய்து தொடர்ந்து பேட் செய்து வந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 83 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
நங்கூர இன்னிங்ஸ் விளையாடிய ஸ்மித் 85 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 11 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளார்கள்.
இங்கிலாந்து பவுலர்கள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த எடுத்த அனைத்து திட்டங்களும் அவர்களுக்கு பலன் அளிக்காமலேயே போனது. பகுதி நேர பந்து வீச்சாளரான ரூட் 2, வேகப்பந்து வீச்சாளர் டங் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஸ்டிரைக் பவுலர்களான ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் விக்கெட்டுகள் எதுவும் வீழ்த்தவில்லை. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி வலுவான நிலையில் உள்ளது.
டாபிக்ஸ்