Anil Kumble: 2019 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தோல்விக்கு காரணமான இருவர் - கும்ப்ளேவின் விளக்கம்
Jun 01, 2023, 08:39 PM IST
2019 உலகக் கோப்பை தொடருக்கு நல்ல பார்மில் இருந்த ராயுடு அணியில் தேர்வு செய்யாமல் போனது இந்தியா அணி தோல்வி அடைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை இந்திய அணி அரையிறுதி வரை சென்று துர்தஷ்டவசமாக தோல்வியை தழுவியது. இந்த தொடரில் இந்திய அணி தேர்வில் பல்வேறு குழப்பங்கள் நிலவயது அனைவருக்கும் தெரியும்.
குறிப்பாக நான்காவது பேட்ஸ்மேனுக்கான தேர்வில் மிகப் பெரிய சிக்கல் எழுந்த நிலையில் அந்த இடத்தில் அப்போது பார்மில் இருந்த விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டார். புதிய வீரரான விஜய் ஷங்கர் போதிய அனுபவம் இல்லாமல் இருந்ததுடன், அவரது தேர்வு குறித்து விமர்சனங்களுக்கும் முன் வைக்கப்பட்டது.
அத்துடன் அப்போது நல்ல பார்மில் இருந்த அம்பத்தி ராயுடுவை அணியில் எடுப்பது குறித்து சிறிய அளவில் விவாதம் கூட நடத்தவில்லை. அதற்கு முன்னதாக யுவராஜ் சிங், ரெய்னா, ரஹானே போன்றோர் விளையாடிய அந்த இடத்தில் ராயுடு சரியான தேர்வாக இருக்கும் என பலரும் கருத்துகளை முன் வைத்தனர்.
ஆனால் இதை பற்றி கவலைப்படாமல் இந்திய அணி கேப்டனாக இருந்த விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி ஆகியோர் புதிய வீரரான விஜய் ஷங்கரை தேர்வு செய்தனர். அவர் அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிதால் இந்த வாய்ப்பை பெற்றார். அத்துடன் பேட்டிங்குடன், வேகப்பந்து வீச்சு பெளலிங்கும் செய்யக்கூடிய விஜய் ஷங்கர் இங்கிலாந்து ஆடுகளங்களுக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த வீரராக இருப்பார் என அவரது தேர்வு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
ரவுண்ட் ராபின் முறையில் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுடனும் மோதும் விதமாக நடைபெற்ற அந்த உலகக் கோப்பை தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய விஜய் ஷங்கர் 58 ரன்கள் எடுத்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 29 ரன்களாக இருந்தது. அதேபோல் பெளலிங்கில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உலகக்கோப்பைக்கு முன்பாக 2018 முதல் மார்ச் 2019 வரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ராயுடு,650 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். அதில் ஐந்து அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும்.
இப்படி சிறப்பான ஃபார்மில் இருந்த ராயுடுவை கடைசி நேரத்தில் உலகக் கோப்பையில் எடுக்காமல் கேஎல் ராகுலை நான்காவது இடத்துக்கு விளையாட வைத்தனர். மேலும் ராயுடு இடத்துக்கு விஜய் ஷங்கர் எடுக்கப்பட்டார். இது ராயுடு, பிசிசிஐ இடையில் பனிப்போராக மாறியது.
உலகக் கோப்பை வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த ராயுடுவுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், ஓய்வு முடிவை அறிவித்தார்.
இதுகுறித்து கும்ப்ளே கூறியதாவது, "2019 உலககோப்பையில் ராயுடு விளையாட வைக்கப்பட்டிருக்க வேண்டும். நான்காவது இடத்துக்கு நீண்ட காலமாக இவர் தான் தயார் செய்யப்பட்டு வந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் அவரை அணியில் எடுக்காமல் போனது, அவரது பெயரை எந்த இடத்திலும் இல்லாதவாறு செய்தது முற்றிலும் தவறு.
ரவி சாஸ்திரி, விராட் கோலி இருவரும் இதில் பெரிய தவறை செய்துவிட்டார்கள். அணி நிர்வாகம், பிசிசிஐ இடம் இது பற்றி பேசி அவரை அணியில் எடுத்திருக்க வேண்டும். இதன் காரணமாக நான்காவது பேட்ஸ்மேனுக்கான இடம் சரியாக அமையாமல் கோப்பையை இழக்கவும் நேரிட்டது. இந்த தவறை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என்றார்.
ராயுடுவுக்கு பதிலாக தேர்வுசெய்யப்பட்ட கேதர் ஜாதவும் பெரிதாக ஸ்கோர் குவிக்கவில்லை. 6 போட்டிகளில் விளையாடி ஜாதவ் 80 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஒரு அரைசதம் அடங்கும்.
டாபிக்ஸ்