(3 / 6)கலைஞர் கருணாநிதி - பேராசிரியர் அன்பழகன்"முதலில் நான் மனிதன்,இரண்டாவது நான் அன்பழகன்,மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன்,நான்காவது அண்ணாவின் தம்பி,ஐந்தாவது நான் கலைஞரின் தோழன்"-இந்த வார்த்தைகள் மறைந்த திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உதிர்த்தவை.கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதி - பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது பிரண்ட்ஸ்ஷிப் என்றுமே மூழ்காத ஷிப் என்று சொல்லலாம். 1942ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் மாணவராக க.அன்பழகன் இருந்த காலத்தில் திருக்குவளையில் கலைஞர் கருணாநிதி நடத்திய இயக்க நிகழ்ச்சியில் இவர்களின் முதல் சந்திப்பு ஏற்பட்டது. அன்று தொடங்கிய இவர்களின் நட்பு என்றும் இணை பிரியாமல் இருந்தது என்று சொல்லலாம்.அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆனார். அப்போது நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலைஞரை தளபதியாக ஏற்றுக் கொள்வேனே தவிர தலைவராக ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறியவர் க.அன்பழகன்.இந்த சம்பவம் தொடர்பாக தனது நெஞ்சுக்கு நீதி சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள கலைஞர் கருணாநிதி, “பேராசிரியர் நெஞ்சில் பட்டதை சொல்லக்கூடியவரே தவிர பிளவு எனும் நஞ்சைக் கழகத்தில் கலந்திட கனவிலும் நினைக்காதவர். என்னிடம் மிகைப்படச் சொன்னவர்களை அமைதிப்படுத்தினேன். இதனை நான் எழுதும்போது இந்தக் கட்சியில் நான் தலைவர், பேராசிரியர் பொதுச்செயலாளர். நாங்கள் இருவரும் பிரியாதவர்கள், பிரிக்கப்பட முடியாதவர்கள். தலைவர் பதவி, ஏற்றுள்ள பொறுப்புகள் சுட்டிக்காட்டப் பயன்படும் சொற்களே தவிர, எங்களுக்குள் எந்தவித ஏற்றத்தாழ்வும் இருப்பதாக நான் என்றுமே எண்ணியதில்லை. இடுக்கண் கலையும் நட்பின் இலக்கணமாக இதய உணர்வுகளால் ஒன்றிக் கலந்துவிட்ட ஒரு உடன்பிறப்பாக இந்த தமிழனம் காக்க, உற்ற படைக்களனாக விளங்குகின்ற அவருக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்குவது எனக்கு மிகப்பெரும் கடமையாயிற்று.” என குறிப்பிட்டு உள்ளார். இவர்களின் இறப்பு தேதியிலும் கூட சில ஒற்றுமையில் உள்ளன. கலைஞர் கருணாநிதி ஆகஸ்ட் 7ஆம் தேதியும், பேராசிரியர் க.அன்பழகன் மார்ச் 7ஆம் தேதியும் மறைந்தனர் என்பது கூடுதல் தகவல்.