Puducherry EB bill: ரூ.12 லட்சம் பில்! செக்யூரிட்டி ஷாக்காக்கிய மின்கட்டணம்!
Sep 14, 2022, 05:53 PM IST
இரண்டு மாதம் மின்சாரத்துக்கான பில் வராத நிலையில், திடீரென ரூ. 12 லட்சம் மின் கட்டணமாக வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் செக்யூரிட்டியான சரவணன். இதுதொடர்பாக அவர் மின்சார அலுவலகத்திடம் முறையிட்டபோது தவறாக அனுப்பியிருப்பதாக அலட்சியமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்சார உயர்வுக்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். மின்கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
ஆளும் திமுக அரசின் கூட்டணி கட்சிகளும் மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்பை தெரிவித்து வருகின்றனர். மின்சார கட்டண விவகாரம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில், புதுச்சேரியில் வாட்ச்மேன் ஒருவருக்கு ரூ. 12 லட்சம் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்று பில் அனுப்பி அவருக்கு சூடு வைத்துள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் வசித்து வரும் சரவணன் (57) என்பவர் டிவி மெக்கானிக்காக உள்ளார். இரவு நேரத்தில் செக்யூரிட்டியாக பணிபுரியும் சரவணன் தனது வீட்டுக்கு ரூ. 800 வரை கொஞ்சம் கூடுதல், குறைவாக மின்சார கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.
புதுசேரியில் மின்சாரத்துறை தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து மின்சாரத்துறை ஊழியர்கள் கடந்த இருமாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், புதுச்சேரியில் எங்கும் மின்சார கட்டணத்துக்கான ரீடிங் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தற்போது ரீடிங் எடுக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கான பில் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தனது வீட்டுக்கு வந்த பில் தொகையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் செ்யூரிட்டியான சரவணன். இவரது வீட்டுக்கு வந்த மின் கட்டணமாக பில்லில் ரூ. 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்து. இதையடுத்து சரவணன், முத்தியால்பேட்டை மின் அலுவலகத்தில் சென்று பில் கட்டணம் தொடர்பாக நேரடியாக முறையிட்டார்.
இதைத்தொடர்ந்து பில்லையும், ரீடிங் அளவையும் சரி பார்த்த அலுவலர்கள் ரீடிங் செய்ததில் தவறு இருப்பதை கண்டறிந்தனர். .கடந்த முறை மீட்டரின் ரீடிங் 20,630 என இருந்த மீட்டர் ரீடிங், இந்த முறை 21,115 ஆக வந்துள்ளது. ஆனால் மின்சார துறை ரீடிங் எடுப்பவரின் அலட்சியத்தால், 211150 என்று கூடுதலாக ஒரு பூஜ்ஜியம் சேர்க்ப்பட்டு தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அத்துடன் இது சரி செய்து தரப்படும் எனக் கூறி ஒரு நாள் முழுவதும் மின்சாரத்துறை அலுவலகத்தில் சரவணனை அலைகழிக்க வைத்துள்ளனர்.