வாடகை தாய்மார்களுக்கு 3 ஆண்டு சுகாதார காப்பீடு வாங்க தம்பதியர்களுக்கு உத்தரவு
Jun 24, 2022, 12:22 PM IST
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிகள் வாடகை தாய்மார்களுக்கு 3 வருடத்துக்கான சுகாதார காப்பீட்டை வாங்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளில் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுக்கும் நடைமுறை தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கர்ப்பம் தரிப்பதில் சிக்கல், பிசிஓஎஸ் பிரச்னை உள்பட கருப்பை தொடர்பான நோய் பாதிப்பு உள்ளவர்கள் குழந்தை பெற்றெடுக்க முடியாதபோது, வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்.
அதேபோல் கணவன் - மனைவி என இருவரும் வேலைக்கு செல்வது, பெண்கள் தங்கள் உடலை அழகை வயதானாலும் பேனி பாதுக்காப்பது போன்ற காரணங்களாலும் தாங்களே குழந்தை பெற்றெடுப்பதை தவிர்த்து வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்.
சில சமயங்களில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் முயற்சியில் வயிற்றில் வளரும் சிசுவுக்கு போதிய வளர்ச்சி இல்லையென்றால் கருகலைப்பும் மேற்கொள்ள நேரிடும். இதுபோன்ற தருணங்களில் தம்பதியினரின் குழந்தையை சுமக்கும் வாடகை தாய்மார்கள் உடல்நிலை பாதிப்பும் ஏற்படும்.
இதையடுத்து இந்தியாவில் வாடகைத் தாய் ஒழுங்குமுறை விதிகளின்படி, வாடகைத் தாய் வழியாக குழந்தை பெற விரும்பும் தம்பதிகள் 36 மாத காலத்துக்கு குழந்தையை பெற்றெடுத்து தரும் அவர்களுக்கு ஆதரவாக பொது சுகாதார காப்பீட்டை வாங்க வேண்டும் என உத்தரவிட்ப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிமுறைகளில் கூறியிருப்பதாவது, "காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனம் அல்லது முகவரிடமிருந்து 36 மாத காலத்துக்கு வாடகைத் தாய்க்கு பொது சுகாதார காப்பீட்டை, குழந்தை பெற்றெடுக்கும் தம்பதியர் வாங்க வேண்டும்.
கர்ப்பம் மற்றும் பிரசவத்துக்குப் பிந்தைய காலங்களிலும், பிரசவ சிக்கல்களால் ஏற்படும் அனைத்துச் சிக்கல்களுக்கும் உண்டாகும் செலவுகளையும் ஈடுகட்ட போதுமான தொகையாக அவை இருக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1971ஆம் ஆண்டின் மருத்துவ சட்டத்தின்படி வாடகைத் தாய், வாடகைத் தாய் முறையின் போது கருக்கலைப்புக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.