டெல்லி பட்ஜெட் நிறுத்தி வைப்பு! மத்திய அரசு உத்தரவு! கெஜ்ரிவாலுக்கு சிக்கல்!
Mar 21, 2023, 09:23 AM IST
Delhi Budget 2023: இந்திய வரலாற்றில் முதன் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வதை மத்திய அரசு நிறுத்தி உள்ளது- அரவிந்த் கெஜ்ரிவால்
புதுடெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த பட்ஜெட் மத்திய அரசின் உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு நெருக்கடி கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
யூனியன் பிரதேசமான டெல்லியை பொறுத்தவரை காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசிடமே உள்ளது. மத்திய அரசினை சார்ந்தே யூனியன் பிரதேச அரசும் இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகளும் மோதல் போக்கும் நிலவி வருகிறது. டெல்லி ஆம் ஆத்மி அரசில் முக்கிய அமைச்சர்களாக அங்கம் வகித்தவர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இரு தரப்பிற்குமான மோதல் உச்சம் தொட்டுள்ளது.
வரவிருக்கும் 2023-24ஆவது நிதியாண்டுக்காக டெல்லி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவிருந்த பட்ஜெட் மத்திய அரசின் உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசு இன்று பட்ஜெட் தாக்கல் செய்வதை நரேந்திர மோடி அரசு நிறுத்தி வைத்துள்ளதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் உள்துறை அமைச்சகத்திடம் அனுப்பியதாகவும் அதற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை என்றும் அம்மாநில நிதிமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் “சில மர்மமான காரணங்களால் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இந்திய வரலாற்றில் முதன் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்வதை மத்திய அரசு நிறுத்தி உள்ளதாக விமர்சித்துள்ளார்.”
டெல்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 17ஆம் தேதி தொடங்கியது. முன்னாள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு அவரிடம் இருந்த நிதித்துறை கெஹ்லோட்டிடம் சென்றது.
இன்று காலை 10 மணிக்கு கூடும் பேரவையில் கெஹ்லோட் பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக கடந்த மார்ச் 10ஆம் தேதியே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக பட்ஜெட் அனுப்பபப்ட்டுள்ளதாக கெஹ்லோட் அறிவித்துள்ளார். இருப்பினும் சில காரணங்களுக்காக மத்திய அரசு அனுமதி தர மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.