Rahul Gandhi vs Anurag: ’சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகின்றனர்!’ ராகுல் காந்தியை சாடிய அனுராக்!
Jul 31, 2024, 05:08 PM IST
Rahul Gandhi vs Anurag Thakur: சாதி தெரியாதவர்கள் எல்லாம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டும் என்று பேசுவதாக ராகுல் காந்தி குறித்து நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. அனுராக் தாகூர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சாதி தெரியாதவர்கள் எல்லாம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டும் என்று பேசுவதாக ராகுல் காந்தி குறித்து நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. அனுராக் தாகூர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல் காந்தியை சாடிய அனுராக் தாகூர்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான உரையில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றும், இந்தியா கூட்டணி இதில் உறுதியாக உள்ளதாகவும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர், "சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள். இந்த அவையிலேயே முன்னாள் பிரதமர் ஆர்ஜி-1 (ராஜீவ் காந்தி) ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்ததை சபாநாயகருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று கூறியது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதில் அளித்து பேசிய அனுராக் தாகூர், சாதி தெரியாத ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி பேசுவதாக நான் கூறியிருந்தேன். ஆனால் யாருடைய பெயரையும் கூறவில்லை என கூறினார்.
அனுராக் என்னை அவமதித்து உள்ளார்
இதற்கு பதில் அளித்து பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அனுராக் தாக்கூர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவமதித்ததாகவும் கூறினார். "ஆதிவாசிகள், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரச்சினைகளை யார் எழுப்பினாலும், துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. இதனை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். அனுராக் தாக்கூர் என்னை துஷ்பிரயோகம் செய்து என்னை அவமதித்துள்ளார். ஆனால் அவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை," என்று ராகுல் காந்தி கூறினார்.
சாதிவாரி கணக்கெடுப்பை கேட்கும் அனுராக்
2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக சாதிவாரி கணக்கெடுப்பு இருந்தது. தேர்தலுக்கு முன், ராகுல் காந்தி இதனை இந்தியாவின் எக்ஸ்ரே என்று அழைத்தார்.
“நாட்டில் எத்தனை பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் உள்ளனர் என்பது யாருக்கும் தெரியாதா? மக்கள்தொகையில் மிகப்பெரிய பகுதிகளை உருவாக்குபவர்களுக்கு அவர்களின் எண்ணிக்கை தெரியாது. பாஜக அரசு சாதி தரவுகளை விரும்பவில்லை. இருப்பினும், பல்வேறு சாதிக் குழுக்களின் மக்கள்தொகையைக் கண்டறிய, இந்தியாவின் எக்ஸ்ரேயைப் பெறுவோம். சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தால் நாடு மாறும்,'' என்றார்.
பட்ஜெட் விவாதத்தில் ராகுல் காந்தி பேசியது என்ன?
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். மகாபாரத காலத்தில் வகுக்கப்பட்ட சக்ரவியூகத்தை போல் தற்போது மோடி, அமித்ஷா, மோகன் பகவன் உள்ளிட்ட 6 பேர் பத்ம வியூகத்தை வகுத்து உள்ளதாகவும், அது தற்போது உடைத்தெரியப்பட்டு வருவதாகவும் ராகுல் காந்தி கூறினார்.
உயர் பதவிகளில் பிரதிநிதித்துவம் குறைந்து உள்ளது
மத்திய அரசில் உயர் அதிகார பதவிகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி,
நிதி அமைச்சகம் சார்பில் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு நடத்தப்படும் அல்வா கிண்டும் நிகழ்வின் புகைப்படத்தை நாடாளுமன்றத்தில் காட்டினார்.
அப்போது, “நாட்டில் 73% பேர் தலித், ஆதிவாசி மற்றும் ஓபிசி சமூகத்தை சேர்ந்த மக்களாக உள்ளனர். அவர்கள் இந்தியாவின் முக்கிய பலம். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்களுக்கு வணிகத்திலும் அரசாங்கத்திலும் போதுமான இடம் கிடைக்கவில்லை.
பட்ஜெட்டிற்கு முந்தைய அல்வா நிகழ்ச்சியில், ஒரு எஸ்.சி, எஸ்.டி அல்லது ஓபிசி சமூகத்தை சேர்ந்த அதிகாரியையும் என்னால் பார்க்க முடியவில்லை. சிறுபான்மை மற்றும் ஓபிசி சமூகத்தை சேர்ந்த தலா ஒருவர் உட்பட 20 அதிகாரிகள் பட்ஜெட் தயாரிப்பின் பின்னணியில் இருந்தனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவர் இல்லை என ராகுல் காந்தி கூறினார்.
டாபிக்ஸ்