Telangana Results 2023: ’கஜ்வெல் தொகுதியில் கேசிஆர் பின்னடைவு! கதறவிடுகிறது காங்கிரஸ்!’
Dec 03, 2023, 09:02 AM IST
”Telangana Results 2023: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரர் ராவ், கஜ்வெல் தொகுதியில் மூன்றாவது முறையாக களம் இறங்கினார். இது மட்டுமின்றி காமரெட்டி தொகுதியிலும் அவர் போட்டியிட்டார்”
தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் போட்டியிடும் காஜ்வெல் தொகுதியில் பின்னடைவை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
119 தொகுதிகளை கொண்ட தெங்கானா மாநிலத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சிக்கும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா (BJP) கட்சிகள் போட்டியிட்டன.
3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த தேர்தலில் 221 பெண் வேட்பாளர்கள், ஒரு திருநங்கை வேட்பாளர் உட்பட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் உட்பட 109 கட்சிகளை சேர்ந்த 2,290 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 103 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த முறை போட்டியிட மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்தவர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களிலும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி 15 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், மற்றவை 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றது.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரர் ராவ், கஜ்வெல் தொகுதியில் மூன்றாவது முறையாக களம் இறங்கினார். இது மட்டுமின்றி காமரெட்டி தொகுதியிலும் அவர் போட்டியிட்டார். அவருக்கு எதிராக காமரெட்டி தொகுதியில் தெலங்கானா காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டியும், கஜ்வெல் தொகுதியில் தெலங்கானா பாஜக தலைவர் எட்டலா ராஜேந்தரும் கேசிஆருக்கு எதிராக களம் இறங்கினர்.
இந்த நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கஜ்வெல் தொகுதியில் 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 19,391 வாக்குகள் வித்தியாசத்திலும், 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 58,000 வாக்குகள் வித்தியாசத்திலும் சந்திரசேகரராவ் பெற்றிருந்தார். இரண்டாவது இடத்தை காங்கிரஸ் கட்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பரப்புரையின்போது, கஜ்வேலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கே.சந்திரசேகரராவ், “தெலுங்கானா இயக்கத்தின் போது சித்திப்பேட்டை எனது கோட்டையாக இருந்தது, ஆனால் என்னை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிறகு கஜ்வெல் எனது கோட்டையாக மாறியது. மாநிலத்தின் முதல் முதல்வர். தெலுங்கானாவுக்கு நல்ல எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையுடன் பல தடைகளை கடந்தேன். கஜ்வேல் மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன் என தெரிவித்து இருந்தார்.