Telangana Exit Poll 2023:’ தெலங்கானாவில் இழுபறி! தனிப்பெரும் கட்சியாகிறது காங்கிரஸ்!’
Nov 30, 2023, 06:50 PM IST
”119 தொகுதிகளை கொண்ட தெங்கானா மாநிலத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சிக்கும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா (BJP) கட்சிகள் போட்டியிட்டன”
தெலங்கானாவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தாலும் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.
119 தொகுதிகளை கொண்ட தெங்கானா மாநிலத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சிக்கும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா (BJP) கட்சிகள் போட்டியிட்டன.
3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இந்த தேர்தலில் 221 பெண் வேட்பாளர்கள், ஒரு திருநங்கை வேட்பாளர் உட்பட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் உட்பட 109 கட்சிகளை சேர்ந்த 2,290 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 103 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த முறை போட்டியிட மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்தவர்.
முதலமைச்சர் சந்திரசேகரர் ராவ் கஜ்வெல் மற்றும் காமரெட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். காமரெட்டி தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டியும், கஜ்வெல் தொகுதியில் பாஜக தலைவர் எட்டலா ராஜேந்தரும் கேசிஆருக்கு எதிராக களம் இறங்கினர்.
இன்று மாலை 6 மணி உடன் தெலங்கானாவில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
ஜன் கி பாத் கருத்துக்கணிப்பின் படி ஆளும் பிஆர்எஸ் 40 முதல் 55 தொகுதிகளையும், காங்கிரஸ் 48 முதல் 64 தொகுதிகளையும், பாஜக 7 முதல் 13 இடங்களையும், ஏஐஎம்எம் கட்சி 4 முதல் 7 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி வரும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.