Article 370: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
Jul 11, 2023, 02:04 PM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்கள் மீது வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் வெளியிடப்பட்ட அரசாணையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இதையடுத்து தலைமை நீதிபதி சந்திர சூட், "இந்த அமர்வு முன் விசாரணைக்கு உள்ள இந்த மனுக்கள் மீது வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி (புதன்கிழமை) முதல் விசாரணை நடைபெறும். வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி தவிர்த்த மற்ற நாட்களில் மனுக்கள் மீது நாள்தோறும் விசாரணை நடைபெறும்" என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அனைத்து தரப்பினரும் ஜூலை 25ஆம் தேதிக்குள் மின்னணு முறையில் தாக்கல் செய்யவேண்டும் என்று அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பிரமாணபத்திரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இதில் உள்ள அரசியல் சாசனம் தொடர்பான விஷயங்களை மட்டுமே விசாரிப்போம் என்று அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கிடையே மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபாசல் மற்றும் முன்னாள் மாணவ செயல்பாட்டாளர் ஷீலா ரஷித் ஆகியோர் இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவை திருப்பப்பெறுவதாக தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, அவர்களின் பெயர்களையும் மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க உச்ச நீதிமன்ற பதிவருக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பான 10 முக்கிய விஷயங்கள்:
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திராட்சூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.
- நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் பெஞ்சின் மற்ற நீதிபதிகள்களாக உள்ளார்கள்.
- ஐஏஎஸ் அதிகாரிகள் ஜாவித் அகமது பட், இலியாஸ் லாவே, சைஃப் அலி கான் மற்றும் ரோஹித் சர்மா மற்றும் முகமது ஹுசைன் பேடர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்.
- குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது குடியரசு தலைவர் அறிவிப்பின் மூலம் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
- மெகபூபா முப்தி தலைமையிலான ஆளும் கூட்டணியில் இருந்து பாஜக விலகியதால், சட்டப்பேரவை நீண்ட நேரம் செயல்படாத நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
- ஜம்மு காஷ்மீரில் குடிமக்களின் அனுமதியின்றி சட்டப்பிரிவை ரத்து செய்திருக்க முடியுமா என்பதை உச்ச நீதிமன்றம் ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 2020ஆம் ஆண்டில், இந்த வழக்குகள் வெவ்வேறு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அத்துடன் இந்த வழக்குகளை பெரிய அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் மறுத்துள்ளனர்.
- 2018ஆம் ஆண்டில் 52 திட்டமிடப்பட்ட பந்த் சம்பவங்கள் காணப்பட்டன. ஆனால் தற்போடு சிறப்பு சட்டம் நீக்கிய பின்னர், 2023இல் பூஜ்ஜியமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசு சமர்பித்துள்ள பிரமாண பத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
- பிரிவினைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் அதன் முழு நிர்வாகத்தையும் உள்ளடக்கிய ஆழமான முன்னேற்ற, உறுதியான மற்றும் முற்போக்கான மாற்றங்களை
- கண்டுள்ளன. அங்கு வளர்ச்சி நடவடிக்கைகள், பொது நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் போன்ற எவ்வித சாதி பாகுபாடுமின்றி ஒவ்வொரு குடிமகன்களுக்கும் சாதகமாக சூழ்நிலையை உருாக்கியுள்ளதாக மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
- ஆகஸ்ட் 5, 2019 அன்று சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அப்போது ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியது. இதில் பழைய மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370இன் படி ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கடந்த 1954ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 அமலுக்கு வந்தது.
இதன்பின்னர் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
டாபிக்ஸ்