Indonesia earthquake recovery: 6 வயது சிறுவன் 2 நாள்களுக்கு பின் உயிருடன் மீட்பு
Nov 24, 2022, 08:10 AM IST
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இடிபாடுகளில் இருந்து 2 நாள்களுக்கு பிறகு 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். சிறுவனுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த திங்கள்கிழமை இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தில் அந்த பகுதியில் இருந்த ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து இடிபாடுகளில் சிக்கி இரண்டு நாள்களாக இருந்த 6 வயது சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டுள்ளான்.
இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண் கழகம் மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில், அஜ்கா மவுலானா மாலிக் என்ற சிறுவன் இடிபாடுகளில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். நிலநடுக்கத்தில் சிறுவனின் பாட்டி உயிரிழந்து விட்ட நிலையில், அவர் உடல் அருகிலேயே சிறுவன் இருந்துள்ளான். சிறுவனின் பெற்றோரின் உடல்கள் ஏற்கனவே மீட்டக்கப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் 162 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று காலை வரை இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், பலி எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது.
இதுவரை இந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.