ராகுல்காந்தியிடம் 10 மணிநேரம் துருவிதுருவி விசாரணை-இன்றும் தொடரும்
Jun 14, 2022, 09:18 AM IST
நேஷனல் ஹெரால்டு நாளிதழ் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் ராகுல்காந்தியிடம் நேற்று 10 மணிநேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இன்று மீண்டும் விசாரணைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுதில்லி: நேஷனல் ஹெரால்டு நாளிதழ் மூலம் சட்டவிரோத பணப்பரிவத்தனையில் ஈடுபட்டதாகக் கூறி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியையும், அவரது தாயார் சோனியா காந்தியையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று விசாரணைக்கு வந்த ராகுல்காந்தியிடம் தொடர்ந்து 10 மணிநேரமாக அதிகாரிகள் விசாரித்தனர். இன்றைக்கும் அந்த விசாரணை தொடர்கிறது.
யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீதான புகார் தொடர்பாக விசாரிக்கும் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தி மீது அமலாக்கத்துறை அண்மையில் வழக்குப் பதிவு செய்தது.
யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் வாங்கிய அசோசியேட்டட் ஜர்னல் என்ற இதழ் தொடர்பாக புகார்தாரர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் சதி மற்றும் சட்டவிரோதமாக குறிப்பிட்ட நாளிதழை வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இது ஆளும் பாஜக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தொடுக்கப்பட்ட வழக்கு என்று காங்கிரஸ் சார்பில் கூறப்படுகிறது.
ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமலாக்கப்பிரிவு அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி தர மறுத்து தில்லி போலீஸார் அவர்களை திருப்பியனுப்பினர்.
அதையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, கேசி வேணுகோபால், தீபேந்தர் ஹூடா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரை போலீஸார் பிடித்து பேருந்துகளில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
மூத்த தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விடியோ காட்சிகளும் வெளியாகின. வேணுகோபாலை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பேருந்தில் போலீஸார் ஏற்றினர்.
போலீஸார் நடவடிக்கையில் ப.சிதம்பரத்தின் விலா எலும்பு முறிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
போலீஸாரால் தள்ளிவிடப்பட்ட மற்றொரு தலைவர் பிரமோத் திவாரி சாலையில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஹரிஷ் ராவத், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, வேணுகோபால் ஆகியோர் துக்ளக் ரோடு காவல்நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.
டாபிக்ஸ்