Independence Day 2022: ஊழல் தேசத்தை அரிக்கும் கரையான் - பிரதமர் மோடி
Aug 15, 2022, 12:14 PM IST
சுதந்திர தின விழாவையொட்டி தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார்.
புதுதில்லி: ஊழல் இந்த தேசத்தை அரிக்கும் கரையான் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சுதந்திர தினவிழாவையொட்டி தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 9ஆவது முறையாக தேசியக் கொடி ஏற்றினார். அப்போது 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அதில், "ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார். மேலும், அவர் பேசுகையில், ஊழல் தேசத்தை அரிக்கும் கரையான். ஊழலை ஒழிக்காமல் ஊழல்வாதிகளை தண்டிக்கும் மனநிலையை மக்கள் வளர்த்துக் கொள்ளாதவரை தேசம் அதன் முழுவேகத்தில் முன்னேற இயலாது என்றார்.
இந்த வேளையில் நான் குறிப்பிட வேண்டிய மற்றொரு சவால் வேண்டியவர்களுக்கு செய்யப்படும் சலுகை. குடும்பத்தினர், உறவினர்கள், வேண்டியவர்கள் என்று காட்டப்படும் சலுகைகளும், செய்யப்படும் சிபாரிசுகளும் பெரிய தீமையாக இருக்கிறது. இது உண்மையான திறமைசாலிகளின் வாய்ப்பைப் பறித்துவிடும். தகுதியும், திறமையும் கொண்டவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் தான் நமது தேசம் வளர்ச்சி காணும் என்று பிரதமர் மோடி பேசினார்.
உலகம் தற்போது தங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளை இந்தியாவில் இருந்து தீர்வு காண விரும்புகிறது. அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணம். இந்த 25 ஆண்டுகளை இளைஞர்கள் தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டுகிறேன் என்றும் தனது உரையில் தெரிவித்தாா்.
பெரிய திட்டங்கள் மற்றும் யோசனைகள் மூலமாக மட்டும் தான் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும் எனவும், இந்தியாவின் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவரின் வளர்ச்சிக்கு இன்னொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் பேசினார்.
டாபிக்ஸ்