Milk Price Hike: பால் விலை ரூ. 4 உயர்வு! நாளை முதல் அமல்
Jan 10, 2023, 07:25 PM IST
புதுச்சேரி அரசின் பால் நிறுவனமான பாண்லேவின் பால் விற்பனை, கொள்முதல் விலையை உயர்த்தி அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆவின் போல், புதுச்சேரி மாநில அரசின் பால் விற்பனை நிறுவனமாக பாண்லே உள்ளது. இந்த நிறுவனம் புதுச்சேரி, காரைக்கால் உள்பட பகுதிகளில் பால் விற்பனை செய்து வருகிறது.
இதையடுத்து சமீப காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக பால் விற்பனை மற்றும் கொள்முதல் விலையை உயர்த்த புதுச்சேரி மாநில அரசு முடிவு செய்தது.
அதன்படி, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 34 என இருந்த நிலையில், அதை ரூ. 37 என உயர்த்தியுள்ளது. பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் ரூ. 4 என உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் மஞ்சள் நிற Double Toned பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ. 42 என விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.42 என விற்கப்பட்ட நீல நிற பாக்கெட் ரூ. 46, ரூ. 44க்கு விற்கப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட் ரூ. 48, ரூ. 48க்கு விற்கப்பட்ட ஆரஞ்சு நிற பாக்கெட் ரூ. 52க்கு விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.
Full Creame சிவப்பு நிற பாக்கெட் புதிய விலையாக ரூ. 62 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலை மாற்றமானது நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் பால் விநியோகத்துக்கு நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் வரை பால் தேவைப்படுகிறது. இதில் உள்ளூர் கூட்டுறவு பால் சங்கங்கள் மூலம் 40 ஆயிரம் லிட்டர் வரை பாண்லே கொள்முதல் செய்கிறது. எஞ்சியுள்ள தேவையை பூர்த்த செய்ய பிற மாநிலங்களில் இருந்து கூடுதல் விலைக்கு பால் வாங்கப்படுகிறது. பால் அதிக விலைக்கு வாங்கப்பட்டாலும் குறைவான விலையிலேயே மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ரூ. 44க்கு வாங்கப்பட்டு ரூ. 42 என குறைவான விலையில் விற்கப்படுவதால், நாள்தோறும் ரூ. 7.50 லட்சம் வரை நஷ்டத்தை பாண்லே நிறுவனம் இயங்கி வந்துள்ளது. கடந்த ஒர் ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், அதை ஈடுகட்டும் விதமாக பால் விலையை உயர்த்த புதுச்சேரி மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக பால் விலையில் ரூ. 4 வரை உயர்த்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.