Karunanidhi birth anniversary: கருணாநிதி குறித்து மனம் திறந்து பிரதமர் நரேந்திர மோடி சொன்ன வார்த்தை!
Jun 03, 2024, 04:34 PM IST
Karunanidhi birth anniversary, PM Modi: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் இன்று அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் அவர் பாடுபட்டார் என்று பிரதமர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாளில் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தனது நீண்ட காலப் பொது வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் அவர் பாடுபட்டார். தனது அறிவார்ந்த இயல்புக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். தத்தமது மாநிலங்களில் நாங்கள் இருவரும் முதல்வர்களாக இருந்தது உள்ளிட்ட, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடனான என்னுடைய பரிமாற்றங்களை நான் வாஞ்சையோடு நினைவுகூர்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் கருணாநிதிக்கு மரியாதை
முன்னதாக, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின் போது திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு, கிரிராஜன், வில்சன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சோனியா காந்தி பேட்டி
கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, "டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழாவில் திமுகவைச் சேர்ந்த எனது சகாக்களுடன் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல சந்தர்ப்பங்களில் அவரைச் சந்திக்கும் நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அவர் சொல்வதைக் கேட்டேன், அவருடைய ஞான வார்த்தைகள் மற்றும் ஆலோசனைகளில் இருந்து பயனடைந்தேன். அவரை சந்தித்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்" என்று தெரிவித்தார்.
கருணாநிதிக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள் - ராகுல் காந்தி
கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி, "தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள். தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தலைவர் அவர். சமூக நீதியை மேம்படுத்துதல், பொருளாதார சமத்துவத்தை முன்னேற்றுதல் மற்றும் தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காக பாடுபட்டவர். நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்கள் மீது அவரது வாழ்க்கை நீடித்த முத்திரையை பதித்துள்ளது." என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்