Bihar CM Nitish Kumar: பீகாரில் பாஜக ஆதரவு - 9ஆவது முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்பு
Jan 28, 2024, 05:54 PM IST
பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசின் முதலமைச்சராக நிதிஷ் குமார் சற்றுமுன் பதவியேற்றார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம்-ஐக்கிய ஜனதா தளம் அரசாங்க கூட்டணியில் முதலமைச்சர் பதவியிலிருந்த நிதிஷ் குமார்,அதில் இருந்து ராஜினாமா செய்த சில மணி நேரங்களுக்குள் பாஜக ஆதரவுடன் 9ஆவது முறையாக பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
பாரத் மாதா கி ஜெய் மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களுக்கு மத்தியில் நிதிஷ் குமார் பதவியேற்றபோது ஜிதன் ராம் மஞ்சி, சிராக் பாஸ்வான், சாம்ராட் சவுத்ரி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த 2022-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவை துண்டித்துக் கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணியில் இணைந்த நிதிஷ் குமார், பீகாரில் மகா கத் பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் ஆனார்.
2022 மற்றும் 2024-க்கு இடையில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஒன்றிணைக்க எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் நிதிஷ் குமார் முன்னிலை வகித்தார். ஜூன் 2023-ல், நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை 'இந்தியா' என்ற பெயரைப் பெறுவதற்கு முன்பே நடத்தினார்.
9ஆவது முறையாக முதலமைச்சரான நிதிஷ் குமார் - முக்கிய அம்சங்கள்:
1. நிதிஷ்குமாருடன், பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றனர். இக்கூட்டணியில் எச்.ஏ.எம் (இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவும் (மதச்சார்பற்ற)) உள்ளது. அதன்படி, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) தலைவர் டாக்டர் சந்தோஷ் குமார் சுமன் ஞாயிற்றுக்கிழமை(இன்று) பதவியேற்றார்.
2. பீகாரில் மாறிவிட்ட அரசியல் சமன்பாட்டில் நிதிஷ் குமாருக்கு இப்போது புதிய அமைச்சரவை கிடைக்கும் என்பதால், ஒரே இரவில், ராஷ்டிரிய ஜனதா தள அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து விலகிவிட்டனர்.
3. லாலு பிரசாத்தின் மகனான தேஜஷ்வி யாதவ் 2024ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளக்கட்சி தோல்வி அடையப்போகிறது என்றும், பீகாரில் அரசியல் விளையாட்டு முடிவடையவில்லை என்றும் கூறினார்.
4. அரசியல் வழிகாட்டி பிரசாந்த் கிஷோர், பாஜகவுடனான நிதிஷின் கூட்டணி முயற்சி குறுகிய காலமே இருக்கும் என்றும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்குள் பீகார் மீண்டும் மாற்றங்களைக் காணும் என்றும் கூறினார். ஆனால், நிதிஷ் குமார் யாருடன் போட்டியிட்டாலும், 2025 சட்டமன்றத் தேர்தலில் அவர் 20 இடங்களுக்கு மேல் வெல்லமாட்டார் எனவும் கூறினார்.
5. நிதிஷ் குமார் துரோகத்தில் புதிய சாதனை படைத்துள்ளார் என்றும்; பாஜக இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது என்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.
6. 2000-ம் ஆண்டு நிதிஷ் குமார் முதல்முறையாக பீகார் முதலமைச்சரானார். அப்போது, அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு எதிராக இருந்தார். அவரது பரப்புரை லாலுவை எதிர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது. 2013ஆம் ஆண்டில், நிதிஷ் குமார், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து, 2015ஆம் ஆண்டு தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வகித்தார்.
7. 2017-ம் ஆண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான உறவை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். 2022-ல், நிதிஷ் குமார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு வந்தார்.
8. நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை இன்று காலை(ஜனவரி 28) அளித்தபோது, இந்தியா கூட்டணியில் நல்லகொள்கைகள் செயல்படவில்லை என்று விமர்சித்தார்.
9. பீகாரில் என்ன நடக்கிறது என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய காங்கிரஸ், ஆனால் இந்தியா கூட்டணியின் நலன் கருதி இது குறித்து இதற்கு முன்பு கருத்து தெரிவிக்கவில்லை. நிதிஷ் குமாரை காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அவமதித்ததாக ஐக்கிய ஜனதா தளத்தின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த காங்கிரஸ், நிதிஷ் குமார் நீடிக்க விரும்பினால், அவர் கூட்டணியில் இருந்திருப்பார் என்றும்; ஆனால் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்பிவிட்டார். முன்னதாக, மல்லிகார்ஜுன கார்கே நிதிஷ் குமாரை அணுக முயன்றார். ஆனால் அது தோல்வியடைந்ததாக காங்கிரஸ் கூறியது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9