Karnataka Election Results: மஜத தலைவர் குமாரசாமியின் மகன் நிகில் தோல்வி!
May 13, 2023, 02:28 PM IST
Nikhil Kumaraswamy: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ராமநகரம் தொகுதியில் போட்டியிட்ட மஜத தலைவர் குமாரசாமியின் மகன் நிகில்குமார் தோல்வியைத் தழுவினார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மஜத தலைவர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி தான் போட்டியிட்ட ராமநகரா தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
கர்நாடக சட்டமனறத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (மே 13) காலை 8 மணி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் மும்முனை போட்டி நிலவியது. இருப்பினும் தொடக்கத்தில் சில தொகுதிகளில் முன்னிலை வகித்த பாஜக சற்று நேரத்தில் பின்னடைவை சந்தித்தது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கட்சி 130 இடங்களைக் கடந்து முன்னிலை பெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி - 131, பாஜக - 66, மஜத - 21, மற்றவை- 6 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக்கை விட 59,709 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 18 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். வருணா தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா 69,731 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். சென்னபட்ணா தொகுதியில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி 34,322 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில், மஜத கட்சியின் தலைவர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தோல்வியைத் தழுவி இருக்கிறார். நிகில் குமாரசாமி தான் போட்டியிட்ட ராமநகரா தொகுதியில் 76,439 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் ஹூசைன் 87,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதே தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கெளதம் கவுடா 12,821 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
முன்னதாக, தேர்தலுக்குப் பிறகு வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்டிருந்தது. பாஜக 2வது இடத்திலும், மஜத கட்சிக்கு மூன்றாவது இடமும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பெரும்பான்மை தேவையான இடங்களை விட அதிக இடங்களில் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது.
டாபிக்ஸ்