தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிட மாற்றம்

ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு பணியிட மாற்றம்

Karthikeyan S HT Tamil

May 31, 2022, 11:51 AM IST

google News
முன்னதாக போதைப் பொருள் வழக்கில் சமீர் வான்கடே உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் விசாரணையை சரிவர நடத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது
முன்னதாக போதைப் பொருள் வழக்கில் சமீர் வான்கடே உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் விசாரணையை சரிவர நடத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது

முன்னதாக போதைப் பொருள் வழக்கில் சமீர் வான்கடே உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் விசாரணையை சரிவர நடத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றிய சமீர் வான்கடே சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த அக்டோபர் மாதம் மும்பை சொகுசு கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின் போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஆர்யன் கான் உட்பட மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றிய சமீர் வான்கடேதான் சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்தி இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டார். இவ்வழக்கை ஆரம்பத்தில் சமீர் வான்கடே விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க என்.சி.பி அதிகாரிகள் ஷாருக் கானிடம் பேரம் பேசியதாகவும் இதில் மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கும் முக்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவர் அப்பொறுப்பில் இருந்து கடந்த நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டு மும்பையில் பகுப்பாய்வு மற்றும் இடர்பாடு மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், ஆர்யன் கானின் போதைப்பொருள் வழக்கை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து தில்லி சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றி மத்திய போதைப்பொருள் தடுப்பு முகமை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் விசாரணை மேற்கொண்ட சிறப்பு விசாரணைக்குழு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், ஷாருக் மகன் ஆர்யன் கான் உட்பட 6 பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று ஆறு பேரும் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடே சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் புலனாய்வு பிரிவில் வரி செலுத்துவோர் சேவை இயக்குநரகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த போதைப் பொருள் வழக்கில் சமீர் வான்கடே உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை எனவும் விசாரணையை சரிவர நடத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சமீர் வான்கடே மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி நிதித்துறை அமைச்சகத்திற்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி