60 ஆண்டு நாகாலாந்து வரலாற்றில் முதல் பெண் எம்எல்ஏக்கள் குர்ஸே, ஜக்காலு!
Mar 02, 2023, 04:23 PM IST
1963ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் தோன்றிய காலத்திலிருந்து பெண்கள் எம்எல்ஏவாக தேர்வானது இல்லை
நாகாலாந்தின் 60 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக 2 பெண் எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாகாலாந்தில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 59 தொகுதிகளுக்கான சட்டசடைப தேர்தலில் 13 லட்சம் வாக்காளர்கள், 139 வேட்பாளர்கள், பங்கேற்றனர். பாஜகவின் தற்போதைய எம்எல்ஏ கசிட்டோ கினிமி அகுலுட்டோ தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் அங்கு மட்டும் தேர்தல் இல்லை.
நாகாலாந்தின் சட்டசபை தொகுதிகளில் என்டிபிபி கட்சி சார்பில் திமாபூர் தொகுதியில் போட்டியிட்ட ஹெக்கானி ஜக்காலு எல்ஜேபி வேட்பாளர் ஹீடோ ஹீமோமயை எதிர்த்து போட்டியிட்டார். இவர் தில்லி பல்கலையில் படித்து அங்கு பணியாற்றி வருகிறார். 48 வயது நிரம்பிய ஜக்காலு அமெரிக்காவில் சட்டம் பயின்றவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக யூத் நெட் என்ற அறக்கட்டளையை தொடங்கி இளைஞர்களுக்கான கல்வி தொடர்பான பல உதவிகளை செய்து வருகிறார். இவர் குடியரசு தலைவரிடம் இருந்து நாரி சக்தி புரஷ்கார் விருது பெற்றவர். இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் 1536 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல் நாகாலாந்தின் என்டிபிபி கட்சியை சேர்ந்த சல்ஹுட்டோனு குர்ஸே என்ற ஓட்டல் அதிபர் மேற்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 1963ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் தோன்றிய காலத்திலிருந்து இதுவரை பெண்கள் எம்எல்ஏவாக தேர்வானது இல்லை. பெண்கள் போட்டியிட்டாலும் வெற்றி பெற்றது இல்லை. கடந்த 1977ம் ஆண்டு எம் ஷாய்ஸா என்ற பெண் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2022ம் ஆண்டு பாங்நான் கோன்யாக் என்ற பெண் பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்