தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bakrit Celebration 2023: நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

Bakrit Celebration 2023: நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

Karthikeyan S HT Tamil

Jun 29, 2023, 09:10 AM IST

google News
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. (ANI)
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

இஸ்லாமியர்களின் மிக முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் வருடமும் இசுலாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இந்த திருநாள் கொண்டாடப்படுகின்றது.

இதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் இன்று அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள பழமை வாய்ந்த ஜமா மசூதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

தமிழ்நாட்டிலும் பக்ரீத் பண்டிகை களைகட்டி இருந்தது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். திருச்சியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள் என 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒன்றிணைந்து தொழுகையில் ஈடுபட்டனர்.

குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்கள் பெண்கள் என 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். இதேபோல் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மசூதிகள், சாலைகள், திடல்கள் என பல இடங்களில் சிறப்பு தொழுகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு நடத்தப்பட்ட சிறப்பு தொழுகைகளில் புத்தாடைகளை அணிந்து இஸ்லாமியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொழுகை ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் பக்ரீத் பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகை செய்தனர். கோயம்புத்தூரில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று இறைவனை வழிபட்டனர்.

முன்னதாக, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

மேலும், நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி