Morocco Earthquake : மொராக்கோ நிலநடுக்கம்.. கொத்து கொத்தாக மீட்கபட்ட உடல்கள்.. பலி எண்ணிக்கை 1300யை கடந்தது!
Sep 10, 2023, 07:16 AM IST
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300ஆக உயர்ந்துள்ளது.
வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது. நகரில் இருந்து தென்மேற்கே 71 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹைஅட்லஸ் மலைகளில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளது. மேலும் தொடர்ந்து பல நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300-ஐ கடந்துள்ளது. மேலும் 1800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கி கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களும் சேதமடைந்தன.
நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என உறுதி அளித்துள்ளார்.
இதற்கு முன்னர் வடகிழக்கு மொராக்கோவின் ஹோசிமாவில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 628 பேர் உயிரிழந்தனர். சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளனர். 1980ல் எல் அஸ்னான் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2500 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்