Sabarimala temple collection:சபரிமலை கோயிலில் 12 நாள்களில் ரூ.52.55 கோடி வருவாய்
Nov 28, 2022, 02:10 PM IST
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு 12 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் வழக்கம் போல் பக்தர்கள் கூட்டம் வரும் எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக ஆன்லைன் முன்பதிவு முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அத்துடன் நேரடியாக வரும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு உடனடி தரிசனத்துக்கான முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
முதல் நாளிலிருந்து சபரிமலைக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையானது சற்று அதிகமாகவே இருந்தது. இந்த எண்ணிக்கையானது நாளுக்கு நாள் மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கிறார்கள்.
இதனால் சபரிமலை கோயிலில் தரிசன நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. வழக்கமாக மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சபரிமலைக்கு வரும் பகதர்களின் வருகையை கருத்தில் கொண்டு 3 மணிக்கே தரிசனத்துக்காக நடை திறக்கப்படுகிறது.
இதையடுத்து சபரிமலைக்கு நடை திறக்கப்பட்டு இதுவரை 12 நாள்கள் ஆகியுள்ள நிலையில், ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. அதன்படி பிரசாதங்களான அப்பம் மூலம் ரூ.2.58 கோடியும், அரவணை பாயாசம் மூலம் ரூ.23.57 கோடியும், காணிக்கையாக ரூ.12.73 கோடியும் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் தெரிவித்துள்ளார்.
இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி ஐய்யப்பனை தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் 30ஆம் தேதி வரை சபரிமலை தரிசனத்துக்கு 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனுடன் உடனடி முன்பதிவையும் சேர்த்தால் நவம்பர் மாதத்தில் மட்டும் 10 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.