Weather Update: தொடங்கியது தென்மேற்கு பருவ மழை..கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!
May 30, 2024, 01:08 PM IST
Weather Update, Monsoon 2024:கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம், கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.
மினிகாய், அமினி, திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், அல்லப்புழா, கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், குடுலு மற்றும் மங்களூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
திருவனந்தபுரத்தில் கனமழை
இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. காலை முதல் மிதமான அளவில் பெய்த மழை, நேரம் செல்லச்செல்ல கனமழையாக மாறியது. இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார்கள், இருசக்கர வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. மேலும் சாலைகளில் ஓடிய தண்ணீர், கடைகள், பள்ளிகள், வணிக நிறுவனங்களுக்குள்ளும் புகுந்தது. ஆலப்புழா மாவட்டத்திலும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மழையின் போது வீசிய காற்றில் மரங்கள் சாய்ந்து வீடுகள் மீது விழுந்தது.
தென்மேற்கு பருவமழை
இந்த சூழலில் கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இன்றே (மே 30) அதற்கான சாதகமான நிலை இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று தொடங்கி இருக்கிறது.
மஞ்சள் எச்சரிக்கை
இதனால் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு வரும் 2 ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முதலில் குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையோரத்தில் தொடங்கி, திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் என கேரள மாநிலம் முழுவதும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வரும் 1 ஆம் தேதியில் இருந்து 3 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1 ஆம் தேதியில் இருந்து 3ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்.இன்றும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை இல்லை எனவும் கூறியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்