தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  வீழ்ந்தார் ராஜபட்சே! மகிந்தாவின் அரசியல் வாழ்வும் வீழ்ச்சியும்- ஒரு பார்வை

வீழ்ந்தார் ராஜபட்சே! மகிந்தாவின் அரசியல் வாழ்வும் வீழ்ச்சியும்- ஒரு பார்வை

I Jayachandran HT Tamil

May 10, 2022, 03:19 PM IST

google News
இலங்கை பிரதமர் ராஜபட்சே தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து புதிய அரசு அமையவுள்ளது. விடுதலைப்புலிகளை ஒழித்ததன் மூலம் விஸ்வரூபம் எடுத்த மகிந்த ராஜபட்சே இப்போது கூனிக்குறுகி அரசியல் சித்திரக்குள்ளனாகக் காட்சியளிக்கும் வரலாற்றுப் பின்னணியை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.
இலங்கை பிரதமர் ராஜபட்சே தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து புதிய அரசு அமையவுள்ளது. விடுதலைப்புலிகளை ஒழித்ததன் மூலம் விஸ்வரூபம் எடுத்த மகிந்த ராஜபட்சே இப்போது கூனிக்குறுகி அரசியல் சித்திரக்குள்ளனாகக் காட்சியளிக்கும் வரலாற்றுப் பின்னணியை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.

இலங்கை பிரதமர் ராஜபட்சே தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து புதிய அரசு அமையவுள்ளது. விடுதலைப்புலிகளை ஒழித்ததன் மூலம் விஸ்வரூபம் எடுத்த மகிந்த ராஜபட்சே இப்போது கூனிக்குறுகி அரசியல் சித்திரக்குள்ளனாகக் காட்சியளிக்கும் வரலாற்றுப் பின்னணியை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.

கொழும்பு: 76 வயதான மகிந்த ராஜபட்சே இலங்கை அரசியலின் முடிசூடா மன்னராக விளங்கிய முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவையும் மிஞ்சி வானளாவிய அதிகாரத்துடன் உலா வந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசியலில் அவரது சக்தியை யாராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை. எதிர்த்தவர்கள் எல்லாம் ஒரு வெள்ளை ஆம்னிக்காரில் கடத்தப்பட்டு நிர்தாட்சண்யமாகக் கொல்லப்பட்டவர்கள். அந்தப் பட்டியலில் பிரபல செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் என சகட்டுமேனிக்கு அடங்குவர். அப்படிப்பட்ட ராஜபட்சே இன்றைக்கு தனது பிரதமர் பதவியைத் துறந்துள்ளார் என்பதை கிட்டத்தட்ட விரட்டப்பட்டார் என்றால் மிகையாகாது.

ராஜபட்சேயின் அரசியல் வாழ்வில் அவர் சாதித்த பெரும் சாதனைகளாகக் குறிப்பிடவேண்டுமென்றால் தமிழர்கள் வாழும்பகுதியில் குற்றப்பின்னணி கொண்ட சிங்களவர்களையும், இனவாத வெறியர்களையும், முன்னாள் சிறைக்கைதிகளையும் குடியேற்றம் செய்ததைச் சொல்லலாம். அதுவும் இந்திய அரசு அளித்த நிதியிலேயே இந்த குடியேற்றத் திட்டமும், குடியேறியவர்களுக்கு இலவச வீடு கட்டித் தந்ததாகவும் பல விமர்சனங்கள் எழுந்தபோதும் ராஜபட்சே அவற்றை கண்டுகொள்ளவில்லை.

இதைவிட பெரிய சாதனை என்னவென்றால் 2009ல் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இயங்கி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை அடியோடு ஒடுக்கி ஒழித்ததைக் குறிப்பிடலாம். சரணடைய வந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மகன்கள், மனைவி மற்றும் எல்டிடிஇ முக்கியத் தலைவர்களையும் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டதன் காரணகர்த்தா இந்த மகிந்த ராஜபட்சே. எல்டிடிஇ ஆதரவு செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவை பிடித்து பெண் என்றும் பாராமல் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, வீரர்கள் என மெச்சிக் கொண்ட இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கியால் பலமுறை சுட்டுக் கொன்றனர். ராஜபட்சேயின் இதுபோன்ற கொடூர வெறியாட்டத்துக்கு ஊதுகுழலாக இருந்து அவரை பரவசப்படுத்திய பெருமை அப்போதைய இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகாவைச் சாரும்.

ராஜபட்சேயின் அடிமை அதிகாரிகளின் அராஜகங்களையும், படுகொலைகளையும் 'கில்லிங் ஃபீல்டு ஶ்ரீலங்கா' என்ற தலைப்பில் நிஜ விடியோ ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டது பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 என்ற ஊடக நிறுவனம். ஆனால் அது அத்தனையும் பொய்யென இலங்கை அரசால் மறுக்கப்பட்டது. அந்த விடியோ ஆதாரத்தை வைத்து நடத்தப்பட்ட விசாரணைகளும் பொய்த்துப் போயின.

இதெல்லாம் ராஜபட்சேவின் ராஜதந்திரம்!

தமிழ் உணர்வாளர்கள் எல்லாம் ராஜபட்சேவை இந்தக் கோணத்தில் பார்த்திருக்க, இலங்கை பெரும்பான்மை சிங்களவர்களோ இதை மாற்றிப் பார்த்தார்கள். பல ஆண்டுகளாக இலங்கையை பொருளாதாரச் சிக்கலில் வீழ்த்திய ஈழப் போராட்ட ஆயுதக்குழுக்களை, மனித வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி பிரேமதாசா, லலித் அதுலத் முதலி, விஜய குமாரதுங்க போன்ற முக்கியத் தலைவர்களை சர்வசாதாரணமாகக் கொன்று குவித்த பிரபாகரனின் எல்டிடிஇயையும் ஒடுக்கியதால் உள்நாட்டுப் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்த மாவீரனாக சித்தரிக்கப்பட்டதோடு அதை சிங்கள மக்கள் நம்பவும் செய்தனர். இதில் ஒட்டுமொத்தமாக எல்லா சிங்களவர்களையும் குற்றம் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், இறுதி ஈழப்போரின்போது பிடிபட்ட விடுதலைப்புலிகளை சர்வதேச விதிகளையும் மீறி மனித உரிமைகளை துச்சமாகக் காற்றில் பறக்கவிட்டபடி கைகால்களை கட்டிப்போட்டு பின்புறம் இருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இலங்கை ராணுவத்தினரின் அராஜகச் செயல்களை வெளியுலகுக்குக் கொண்டு சென்றதும் மனிதநேயமிக்க சில ராணுவ வீரர்களும், உயிருக்கு பயந்து உண்மையை மறைக்க நினைக்காமல் நேர்மையுடன் செயல்பட்ட பிரபல பத்திரிகையாளர்களையும் இங்கு பாராட்டியே ஆகவேண்டும். அவர்களும் சிங்களவர்கள்!

இது ஒருபுறமிருக்க விடுதலைப்புலிகளின் நெட்வொர்க்கை முற்றிலும் அழிக்க அண்டை நாடுகள் அளித்த பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தி, மறைமுக நிதியுதவி உள்பட சகல காரியங்களையும் செய்து ஜெயம் கொண்டார் ராஜபட்சே.

இலங்கை அரசியலில் அவரது செல்வாக்கு உயர்ந்து கொண்ட போனபோது வந்தது 2010 நாடாளுமன்றத் தேர்தல். அருதிப் பெரும்பான்மையையும் மிஞ்சி மொத்தமுள்ள தொகுதிகளில் ராஜபட்சேவின் கட்சி மூன்றில் இரண்டு பங்கை வென்று அபார சாதனையைப் படைத்தது. முன்னதாக, 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் ராஜபட்சே கட்சிதான் வென்றது. அவர்தான் பிரதமர். அடுத்த ஓராண்டு கழித்து வந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ராஜபட்சே. ஆனால் இந்த முறை ராஜபட்சே வென்றதற்கு முழுமுதற் காரணம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்.

தேர்தலின்போது பிரபாகரன் அறிவித்த மடத்தனமான நிலைப்பாடுதான் ராஜபட்சேயை ஆட்சிப்பீடத்துக்கு கொண்டு அமர்த்தியது.

சிங்களவர் என்றாலும் தமிழர்கள்பால் ஓரளவு அனுதாபம் நிறைந்த ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அந்த தேர்தல் சமயத்தில் நல்ல ஆதரவும் வெற்றிவாய்ப்பும் இருந்தது. ஆனால் திடீரென பிரபாகரன், தமிழர்கள் யாரும் தேர்தலில் ஓட்டுப் போடக்கூடாது என்று வெளியிட்ட அறிக்கையால் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு கிடைக்க வேண்டிய தமிழர்கள் ஓட்டுகள் பறிபோயின. ரணில் தோற்றுப்போனார். மகிந்தா மகிழ்வோடு அதிபரானார். பிரபாகரன் தனக்குத்தானே அடித்துக் கொண்ட சாவுமணி இது!

தனது ஆரம்பகால அரசியல் தொட்டே மிகச் சாதுர்யமாக காய்களை நகர்த்தி தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் மகிந்த ராஜபட்சே. சட்டக்கல்வி பயின்று வழக்குரைஞராகப் பணியாற்றிவிட்டு அரசியலுக்கு வந்தார். 1970ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடி நாடாளுமன்றத்தில் ராஜபட்சே அடியெடுத்து வைத்தபோது அவருக்கு வயது 24. நாட்டின் மிக இளைய உறுப்பினர்!

விடுதலைப்புலிகள் அடுத்தடுத்து மேற்கொண்ட அரசியல் படுகொலைகள், அரசாங்க அமைப்புகள் மீது இடைவிடாத தாக்குதல்கள் என நாட்டின் பொருளாதாரத்தை வேரோடு பிடுங்கும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோதுதான் மிகத் தந்திரமாக விடுதலைப்புலிகளுடன் தாற்காலிக போர்நிறுத்தம் என்று சமாதானம் செய்து கொண்டார் ராஜபட்சே. அது ஆண்டு 2004. பின்னர் மீண்டும் ஆட்சிப் பொறுப்பு வந்தவுடன் அவரது நிலைப்பாடு விடுதலைப்புலிகளை பூண்டோடு அழிப்பதாக இருந்தது. வெற்றியும் கண்டார். இந்த வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் ராஜபட்சேயின் சகோதரர் கோத்தபய ராஜபட்சே. இரக்கமேயில்லாமல் பல்வேறு கொடூரத் திட்டங்களைத் தீட்டிக் கொடுத்ததோடு அவை வெற்றிகரமாக நடந்தேறும்வரை கண்கொத்திப் பாம்பாகவே செயல்பட்டார் கோத்தபய.

2011ல் அதிபரானபிறகு தனது பதவிக்கு மேலும் சக்திவாய்ந்த அதிகாரங்களை சட்டப்படி சேர்த்துக் கொண்டார் ராஜபட்சே. இதுவரை அந்தப் பதவிக்கு அப்படியொரு புலிநகக் கூர் அதிகாரங்கள் இருந்ததில்லை. நாடாளுமன்றத்தில் மிருக பலம் கொண்டிருந்ததால் அந்தக் குணத்துக்கு ஏற்ப நிலைமையை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார் ராஜபட்சே.

தொடர்ந்து சர்வதேச அளவில் ஈழத்தமிழர்கள் பறைசாற்றிய குற்றங்களையும், ஐ.நா. அவையில் போர்க்குற்றவாளி என தூற்றப்பட்டபோதும் அவற்றை ராஜபட்சே தன் கால்தூசாக கருதி தன்போக்கிலேயே செயல்பட்டார்.

என்னதான் விடுதலைப்புலிகளின் அமைப்பை ஒழிப்பதற்கு உதவிகளை செய்தபோதும், இந்தியாவை தனக்கு எதிராக அரசியல் காய்களை நகர்த்திவிடக் கூடாது என்று புத்திசாலித்தனமாக யோசித்த ராஜபட்சே, இலங்கையில் சீன வர்த்தக நிறுவனங்கள் பெருமளவில் முதலீடுகளைச் செய்வதற்கு பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை அளித்தார். சீனாவுடன் ராஜ்ஜிய உறவுகளை புதுப்பித்து அந்நாட்டுடன் தன்னை நெருக்கமாக்கிக் கொண்டார்.

இப்படியாகப்பட்டநிலையில் கோத்தபய உள்பட ராஜபட்சேயின் குடும்பத்தாரின் ஊழல்கள் நாட்டை சீர்குலைக்கத் தொடங்கின. அரசு செலவில் தனது பூர்வீக ஊரில் தனது பெயரில் மிகப் பெரும் பொருட்செலவில் ஓர் அருங்காட்சியத்தை அமைத்தார். அதையும் ராஜபட்சே அருங்காட்சியகம் எனவும் பெயரிட்டார். அங்கு தனது தந்தை, தாயாரின் முழு உருவச் சிலைகளையும் நிறுவினார். பல்வேறு தரப்பில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியபோதும் அவையெல்லாம் ராஜபட்சேவால் அலட்சியப்படுத்தப்பட்டன.

நாளுக்குநாள் ராஜபட்சேவுக்கு எதிரான அலை இலங்கையில் ஆர்ப்பரிக்கத் தொடங்கிய நிலையில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபட்சே தோல்வியடைந்தார். ஆனால் 2019ஆம் ஆண்டில் உலகில் இரண்டு அதிபயங்கர குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. ஒன்று இலங்கையில், மற்றொன்று இந்தியாவின் புல்வாமாவில். இரு சம்பவங்களிலும் தலா 240 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

விளைவு இலங்கையில் ராஜபட்சே மீண்டும் ஆட்சிக்கட்டிலைப் பிடித்தார். இந்தியாவில் பாஜக மீண்டும் அதிகாரத்தை தக்கவைத்தது.

வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து தேர்தலில் உள்நாட்டு பாதுகாப்பை முன்னிறுத்தி நடந்த பிரசாரம் தான் இந்த அரசியல் மாற்றங்களுக்கான அச்சாரம். எது நடக்கவேண்டுமென்று ஆண்டவர்களால் நிர்மாணிக்கப்பட்டதோ அது நன்றாகவே நடந்தது.

2019 முதல் ஆட்சியைப் பிடித்து இருந்தாலும் ராஜபட்சேயின் செல்வாக்கு முன்பு போல இருக்கவில்லை. நாடுமுழுவதும் ஊழல் தலைவிரித்து ஆடியது. பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சரிந்தது. அன்றாட சோற்றுக்கே வழியில்லாமல் மக்கள் அல்லலாடி வருகின்றனர். விலைவாசி வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

இந்தநிலையில் கிட்டத்தட்ட ராஜபட்சே ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு புரட்சி எழுந்தது என்றேகூறலாம். பொதுமக்களும், ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும் நடுத்தெருவுக்கு வந்து போராடத் தொடங்கினர். கடந்த சில நாட்களாக போராட்டம் வன்முறையாக மாறியது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நினைத்து இலங்கையல் அவசரநிலையை ராஜபட்சே வெளியிட்ட பிரகடனமானது எரியும் நெருப்பில் நெய் ஊற்றியது போல ஆகிவிட்டது. ராஜபட்சேயின் அறிவிப்பால் கிளர்ச்சியாளர்களின் கோபம் கோரதாண்டவமாகியது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களையும், பெருநகர மேயர்கள் இல்லங்களையும் குறிவைத்து தாக்கத் தொடங்கினர். கட்டுக்கடங்காத சிலர் அந்த விஐபிகளின் இல்லங்களை எரியூட்டி சாம்பலாக்கினர். இதில் ராஜபட்சேயின் அருங்காட்சியகமும், அதிலிருந்த அவரது பெற்றோரின் சிலைகளும் தப்பவில்லை. எல்லாம் பஸ்பமானது.

இந்தப் போராட்டத்தில் ஆளும்கட்சியைச் சேர்ந்த அமரகீர்த்தி அதுகோராலா என்ற நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார். ராஜபட்சேயின் வீட்டுக்குள்ளும் துப்பாக்கிச்சூடு சப்தம் ஒலித்தது. அவரது வீடு கொளுத்தப்பட்டது.

நிலைமை கைமீறிப்போன நிலையில் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக திங்கள்கிழமை இரவில் ராஜபட்சே அறிவித்தார். அவரோடு அவரது கூட்டாளி அமைச்சர்களும் ராஜிநாமா செய்துள்ளனர். புதிய ஐக்கிய அரசு அமைவதற்கு தன்னாலான முயற்சியை செய்வேன் என்று ராஜபட்சே கூறியுள்ளார். இந்நிலையில், எஞ்சியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ராஜபட்சே ஆலோசனை நடத்துவார் என்று புதிய அமைச்சின் நிர்வாகிகள் நியமனம் குறித்தும் அதில் பேசுவார் என்றும் இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் நலகா கோடஹேவா அறிவித்துள்ளார்.

சிங்கம் பதுங்குகிறதா அல்லது பாய்வதற்காகப் பம்முகிறதா! என்ற சந்தேகத்துக்கு காலம் விடையளிக்கும். இப்போதைக்கு அவர் வீழ்ந்தார்.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி