Karnataka Election Results: ‘அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் மாலைக்குள் பெங்களூரு வர வேண்டும்’ காங்கிரஸ் உத்தரவு
May 13, 2023, 11:22 AM IST
12 ஹெலிக்காப்டர்கள் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னணியில் இருப்பதால், அக்கட்சி தனது அனைத்து எம்எல்ஏக்களையும் இன்றே பெங்களூருவுக்குச் வரும்படி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூருவுக்கு தொலைவில் உள்ள கடலோர கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எம்.எல்.ஏக்களை அழைத்து வர ஹெலிக்காப்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பதற்காக சிறப்பு பார்வையாளர்களையும் காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. 12 ஹெலிக்காப்டர்கள் இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி 121 இடங்களில் முன்னிலை பெற்று காங்கிரஸ் கட்சி அரிதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. பாஜக 68 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 28 இடங்களிலும், மற்றவர்கள் 7இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.
கடந்த மே 10-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் வெளியான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடன், காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சிக்கு வரும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் கர்நாடக நலனுக்காக தனது தந்தை முதல்வராக வேண்டும் என்றும் அவர் கூறினார். கர்நாடகாவில் 1985ஆம் ஆண்டுக்கு பிறகு ஆட்சியில் இருந்த எந்த கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.