Kerala: ஒரு புறம் கொட்டி தீர்க்கும் பருவ மழையால் பாதிப்பு! மறுபுறம் காய்ச்சல் பரவல் - அல்லல்படும் கேரளா மக்கள்
Jul 06, 2023, 10:50 AM IST
கேரளாவில் பருவ மழை பாதிப்பு, நோய் தொற்று மற்றும் காய்ச்சல் பரவல் என கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வரும் இரண்டு வாரங்கள் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளா முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், இடுக்கி, பாலக்காடு, காசர்கோடு, கோட்டயம், கோழிக்கோடு, கண்ணூர் உள்பட 11 மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.
அத்துடன் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்டும் விடுக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை வரை மழையானது நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கேரளாவில் கடந்த மே மாதம் முதலே டெங்கு, எலிகாய்ச்சல் போன்ற நோய் பாதிப்புகள் அதிகரித்து வந்தது. தற்போது சிக்குன் குனியா, H1N1 தொற்று பாதிப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
56 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 16 பேருக்கு எலிக்காய்ச்சலும், இருவருக்கு H1N1 பாதிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காய்ச்சலுக்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். இதில் இருவர் H1N1 வைரஸ் பாதிப்புக்கு, இரண்டு பேர் எலி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். கடந்த நான்கு நாள்களில் 53, 069 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்து 594 பேர் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மல்லப்புரம் மாவட்டத்தில் இதுவரை அதிகம்பேர் நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நோய் பாதிப்புக்களை கட்டுப்படுத்தவும், பாதிப்பு உடையவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் கட்டுப்பாடு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கும் கொல்லம், கோழிக்கூடு உள்பட மாநிலம் முழுவதும் 138 இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகம் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் டைப் 2 டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அடுத்த 2 வாரங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு புறம் மழை பாதிப்பு, மறுபுறம் காய்ச்சல் மற்றும் தொற்று பாதிப்பு காரணமாக கேரளா மக்களுக்கு கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்