Yediyurappa: போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிரான பிடிவாரண்ட்..கர்நாடக ஹைகோர்ட் திடீர் உத்தரவு - நடந்தது என்ன?
Jun 14, 2024, 07:26 PM IST
Yediyurappa Case: கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா ஜூன் 17 ஆம் தேதி விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்சோ வழக்கில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது. பாஜக மூத்த தலைவர் ஜூன் 17 ஆம் தேதி விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
போக்சோ வழக்கு
சிறுமி ஒருவருக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண்ணின் தாய் பெங்களூரு சதாசிவநகர் போலீசில் கடந்த மார்ச் மாதம் புகார் செய்தார். இது தொடர்பாக சிஐடி போலீஸ் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி எடியூரப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மீண்டும் விசாரணைக்கு அழைத்தபோது, தான் டெல்லியில் இருப்பதாகவும் ஜூன் 17ஆம் தேதி நேரில் ஆஜராகுவதாக கூறி காலஅவகாசம் கேட்டு எடியூரப்பா கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் சிஐடி போலீசார், எடியூரப்பாவுக்கு கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி பெங்களூரு 1ஆவது விரைவு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்தமனு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.
பிடிவாரண்ட் பிறப்பிப்பு
சிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம், எடியூரப்பா ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதன் மூலம் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரம் மூலம் தெரியவருகிறது. இதற்கிடையே முன்ஜாமீன் வழங்ககோரி, தனது வழக்கறிஞர் மூலம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.
அம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே எடியூரப்பா வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் வரும் 17ம் தேதி எடியூரப்பா விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மறுபுறம் எடியூரப்பாவை கைது செய்தால் தான் இந்த வழக்கில் என்னென்ன நடந்துள்ளது என்பது தெரிய வரும் என்றும் அவரை வெளியே விட்டால் சாட்சியங்கள் கலைக்கப்படும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
கடிதம் சமர்பிப்பு
மேலும், எடியூரப்பா முன்னாள் முதல்வராக இருந்துள்ளார், அவரது வயது மற்றும் விசாரணையில் பங்கேற்ற நடத்தை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி உள்ளார். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார் என்பதால் எந்தவிதமான கைது நடவடிக்கையும் செய்யக்கூடாது என்ற கடிதமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, எடியூரப்பாவிற்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளார். மேலும் எக்காரணத்தை கொண்டும் சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்யக் கூடாது, போலீஸ் விசாரணைக்கு கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும், எடியூரப்பா வரும் 17-ம் தேதி காவல்துறையின் முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர்.
சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்த ஒரு நாள் கழித்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.