Karnataka Election Results: தோல்வி வசம் சிக்கிய சி.டி.ரவி: பாஜக கோட்டையை தகர்த்தது காங்கிரஸ்!
May 13, 2023, 05:18 PM IST
CT Ravi: தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் படுதோல்வி அடைந்துள்ளார்.
தமிழக பாஜக மேலிட பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.டி.ரவி கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியில் படுதோல்வி அடைந்துள்ளார்.
கர்நாடகவில் மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி - 136, பாஜக - 64, மஜத - 19, மற்றவை- 5 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன.
அதிகாரப்பூர்வமாக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 173 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 103 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக 50 தொகுதிகளையும், மஜத 16 இடங்களிலும், மற்றவை 4 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி தான் போட்டியிட்ட சிக்மகளூர் தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெ.டி.தம்மையா 85,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சி.டி.ரவிக்கு 79128 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. இதன் மூலம் சி.டி.ரவி சுமார் 5926 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
சிக்மகளூர் சட்டமன்ற தொகுதி சி.டி.ரவியின் பாரம்பரிய தொகுதியாக கருதப்படுகிறது. கடந்த 2004ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இது காங்கிரஸின் கோட்டையாக திழந்தது. ஆனால், சி.டி.ரவி 2004 ஆம் ஆண்டு தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். இந்த தொகுதியில் இருந்து தொடர்ந்து சி.டி.ரவி நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் சிக்மகளூர் தொகுதி பாஜகவின் கோட்டையாக மாறி இருந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.எஸ்.ஷங்கரை 26,314 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். இந்த நிலையில் சி.டி.ரவி 5-வது முறையாக வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு செல்வார் என அவரது ஆதரவாளர்கள் எண்ணி இருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரிடம் வெற்றியை பறிகொடுத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்