Pawan Kalyan: வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி உடன் இணைந்து ஜனசேனா போட்டி! நடிகர் பவன்கல்யாண் அறிவிப்பு!
Sep 14, 2023, 03:25 PM IST
”தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்”
ஆந்திராவை ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த தெலுங்கு தேசம் கட்சி உடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பிறகு சிறை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், "ஆந்திராவால் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியை தாங்க முடியாது. இன்று நான் முடிவெடுத்துள்ளேன். அடுத்த தேர்தலில் ஜனசேனாவும், தெலுங்கு தேசம் கட்சியும் இணைந்து செயல்படும்" என தெரிவித்தார்.
பவன்கல்யாணின் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நர லோகேஷ் மற்றும் இந்துப்பூர் எம்.எல்.ஏ.வும், சந்திரபாபு நாயுடுவின் மைத்துனருமான பாலகிருஷ்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.
டாபிக்ஸ்