Haryana - J&K Elections Results Live : அரியானா அரியணை யாருக்கு? ஜம்மு காஷ்மீரில் ஆட்சி யார்? தேர்தல் முடிவுகள்!
Oct 08, 2024, 05:17 PM IST
Election results 2024 : அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
தேர்தலில் படுதோல்வி - ஜம்மு காஷ்மீர் பாஜக மாநில தலைவர் ராஜினாமா
ஜம்மு-காஷ்மீர் நவ்ஷேரா தொகுதியில் படுதோல்வியை சந்தித்த பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் ஆம்ஆத்மி வெற்றி - கெஜ்ரிவால் வாழ்த்து
ஜம்மு-காஷ்மீரின் தோடா சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றதற்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தோடா சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் கஜய் சிங் ராணாவை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் 4,538 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஹரியானா முதல்வர் பிரார்த்தனை
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி குருஷேத்திரத்தில் உள்ள ஜோதிசர் கோவிலில் பிரார்த்தனை செய்தார். நயாப் சிங் சைனி 16,054 வாக்குகள் வித்தியாசத்தில் லட்வா தொகுதியில் வெற்றி பெற்றார்.
அப்சல் குருவின் சகோதரர் ஐஜாஸ் குரு தோல்வி
வடக்கு காஷ்மீரின் சோபூர் தொகுதியில் நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் சகோதரரான சுயேட்சை வேட்பாளர் அய்ஜாஸ் அகமது குரு 26,846 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் இர்ஷாத் ரசூல் கார் வெற்றி பெற்றார்.
முதல்வராகும் உமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார் என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
காஷ்மீர் பிராந்தியத்தில் பா.ஜ.க வாஷ் அவுட்
ஜம்மு பிராந்தியத்தில் மொத்தமுள்ள 43 தொகுதிகளில் 26 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. காஷ்மீர் பிராந்தியத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக முன்னிலை பெறவில்லை.
வினேஷ் போகத் வெற்றி
ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் இரண்டாவது இடத்தையும், இந்திய தேசிய லோக் தளம் வேட்பாளர் சுரேந்தர் லாஹர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
காங்கிரஸ் முறையீடு
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் முடிவுகளை இணையதளத்தில் தாமதமாக பதிவேற்றுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி முறையீடு செய்துள்ளது.தேர்தல் முடிவுகளை உடனடியாக பதிவேற்றம் செய்ய உத்தரவிட வலியுறுத்தி தலைமை தேர்தல் ஆணையரிடம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் கொடுத்துள்ளார்.
ஜம்முவில் வெற்றி முகத்தில் காங்கிரஸ் கூட்டணி
ஜம்முவில் வெற்றி முகத்தில் காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது.
ஜம்முவில் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கிய காங்கிரஸின் கூட்டணி கட்சியினர்
சமீபத்திய தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்று 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும், இந்த கட்சியுடன் கூட்டணியிலிருந்த காங்கிரஸ் கட்சியும் 7 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், ஸ்ரீநகரில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தொண்டர்கள் ஆடிப் பாடி வெற்றியைக் கொண்டாடினர்.
மீண்டும் முன்னிலை பெற்ற வினேஷ் போகத்
மொத்தமுள்ள 15 சுற்றுகளில் 11ஆவது சுற்றுமுடிவுகளின்படி, ஜூலானா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத், 6050 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
’ஹரியானாவில் பாஜக மூன்றாவது முறை வெல்லும் எனத் தெரியும்’
ஹரியானா மாநிலம், அம்பாலா கான்ட் பாஜக வேட்பாளர் அனில் விஜ் கூறுகையில், "இது எங்களுக்குத் தெரியும், ஆச்சரியப்படுவதற்கில்லை. ஹரியானாவில் பாஜக மூன்றாவது முறையாக தனித்து ஆட்சி அமைக்கும் என்று இப்போதும் கூறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்து ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்!
ஹரியானா மற்றும் ஜம்மு சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து, ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் கூறுகையில், "முடிவு இன்னும் வரவில்லை. காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்புகிறோம். மாலை வரை காத்திருக்க வேண்டும். ஜெய்ராம் ரமேஷ் ஏதாவது சொல்லியிருந்தால் நன்றாக யோசித்து தான் சொல்லியிருப்பார்’ எனப் பேசியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த காங்கிரஸ்
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஹரியானா முடிவுகளைப் புதுப்பிப்பதில் காலை 9 மணி முதல் 11 மணி வரை 'விளக்க முடியாத மந்தநிலை' இருந்ததாகக் கூறி, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் முன்னணியை இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் தலைவர்
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், காங்கிரஸ் கூட்டணி முன்னணி வகிப்பதை ஒட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். சமீபத்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களில் 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது; குறிப்பாக தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை
மொத்தமுள்ள 15 சுற்றுகளில் 9ஆவது சுற்றுமுடிவுகளின்படி, ஹரியானா மாநிலம், ஜூலானா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத், 4130 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பசோலி தொகுதியில் வென்ற பாஜக வேட்பாளர்
ஜம்மு காஷ்மீரில் பசோலி சட்டமன்றத் தொகுதியில், பாஜகவின் தர்ஷன் குமார் வெற்றி பெற்றார். சமீபத்திய தேர்தல் ஆணையத் தரவுகளின்படி காங்கிரஸின் லால் சிங்கை 16,034 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஹரியானாவில் பாஜக முன்னிலை - தொண்டர்கள் உற்சாகம்
ஹரியானா மாநிலத்தின் அம்பாலாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் பா.ஜ.,வினர், வாக்கு எண்ணிக்கையை கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது பாஜக முன்னிலை வகித்ததும் ஆடி பாடி முழக்கங்கள் எழுப்பி, அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடினர். மேலும், தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, மாநிலத்தில் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜக 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா, "எங்கள் கூட்டணி 50 தொகுதிகளைத் தாண்டி வெற்றிபெறும் என்று நான் இன்னும் நம்புகிறேன்’’ என்றார்.
சமீபத்திய தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, அவர் சென்ட்ரல் ஷால்டெங் சட்டமன்றத் தொகுதியில் 9758 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
சன்னபோரா தொகுதியில் பின்தங்கிய முக்கியப்புள்ளி
சமீபத்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி 6ஆவது சுற்றில், ஜம்மு காஷ்மீரின் அப்னி கட்சியின் தலைவர் சையத் முகமது அல்தாஃப் புகாரி சன்னபோரா தொகுதியில் இருந்து 3490 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
’ஹரியானாவில் பாஜக மீண்டும் வெற்றிபெறும்’ - ஷாஜியா இல்மி
ஹரியானாவில் பாஜக தலைவர் ஷாஜியா இல்மி கூறுகையில்,"ஹரியானாவில் இரு கட்சிகளுக்கும் (காங்கிரஸ் மற்றும் பாஜக) இடையே குறிப்பிடத்தக்க இடைவெளியை நாங்கள் காண்கிறோம். நிறைய விவாதங்கள் நடந்தன, ஆனால் உண்மை உங்கள் முன் உள்ளது. இந்த முறை பாஜக மீண்டும் வெற்றிபெறும் என்று நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். இது ஒரு வரலாற்று வெற்றியாகும்" என்று பேசினார்.
ஹரியானாவில் காங்கிரஸ் பின்னடைவு, பெரும்பான்மையைத் தாண்டிய பாஜக
தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஹரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களில் 50 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களைக் கடந்துள்ளது. காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
’மக்கள் தங்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்’
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஏஐபி எர் ரஷீத் வேட்பாளர் அடில் ஹுசைன் தார் கூறுகையில், "ஜனநாயகத்திற்காக மக்கள் உற்சாகத்தை காட்டிய விதத்தில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு, மக்கள் தங்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். முடிவு நாள் இது அனைவருக்கும் கிடைத்த வெற்றி" என்றார்.
எந்தப் பிரச்னையும் இல்லை - ஜம்மு காஷ்மீர் ராம்பன் எஸ்.எஸ்.பி பேச்சு
ஜம்மு மற்றும் காஷ்மீர் வாக்கு எண்ணிக்கையைப் பற்றி ராம்பன் எஸ்.எஸ்.பி குல்பீர் சிங் கூறுகையில், "எல்லாவற்றையும் உன்னிப்பாகத் திட்டமிட்டோம். சாத்தியமான அனைத்து மனிதனால் உருவாக்கப்படும் பிரச்னைகளையும் நாங்கள் பரிசீலித்து அதற்கேற்ப ஏற்பாடுகளைச் செய்தோம். தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை. வெற்றி அல்லது தோல்வியைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்துள்ளோம். தோல்வியில் நிதானமாக இருக்க சொன்னோம்” என்கிறார்.
பின்தங்கிய பாஜக தலைவர்
ஜம்மு - காஷ்மீரின் பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா, சமீபத்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, நான்காவது சுற்றுக்குப் பிறகும், நவ்ஷேராவிலிருந்து 9661 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
வினேஷ் போகத் பின்னடைவு
இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத், ஹரியானா மாநிலத்தின் ஜூலானா சட்டப்பேரவைத்தொகுதியில் இருந்து பின்தங்கி உள்ளார்.
இருமாநிலங்களில் யார் முன்னிலை?
ஹரியானாவில் காங்கிரஸ் பின் தங்கியும், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டிய நிலையிலும் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஹரியானாவில் பின் தங்கிய காங்கிரஸ் - ஆறுதல் சொன்ன எம்.பி.
ஹரியானாவில் காங்கிரஸ் பின்தங்கியிருந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. குமாரி செல்ஜா கூறுகையில் , “இவை ஆரம்பகால முன்னணி நிலவரம் தான். ஒரு கட்டத்தில், காங்கிரஸ் பெரிய அளவில் வாக்குகள். பெறுவதை நீங்கள் காண்பீர்கள். காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறுவேன். இது மூன்றாவது அல்லது நான்காவது சுற்று. இன்னும் 10 சுற்றுகள் உள்ளது" என்கிறார்
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னணி
ஜம்மு காஷ்மீரின் 90 சட்டமன்றத் தொகுதிகளிலும் சமீபத்திய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டியுள்ளது.
அதன்படி, ஜேகேஎன்சி 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 8 இடங்களைத் தாண்டியுள்ளது. ஆனால், பாஜக 28 தொகுதிகளிலும், பிடிபி 3 தொகுதிகளிலும், ஜே.சி.பி இரண்டு இடங்களிலும், சிபிஐ(எம்) மற்றும் டிபிஏபி தலா 1 தொகுதியிலும் முன்னணி வகிக்கிறது. சுயேச்சை வேட்பாளர்கள் 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
ஹரியானாவில் முன்னிலை வகிக்கும் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா
ஹரியானா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் வேட்பாளருமான பூபிந்தர் சிங் ஹூடா, ரோதக்கில் உள்ள காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்துக்கு வந்தார். அவர் தற்போது கர்ஹி சாம்ப்லா-கிலோய் சட்டமன்றத் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
ஹரியானாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும்போட்டி
ஹரியானா தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி பாஜக 38 தொகுதிகளிலும், காங்கிரஸ் 36 தொகுதிகளிலும், ஐஎன்எல்டி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலா 1 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
மக்கள் மத்தியில் தோன்றிய வினேஷ் போகத்
ஜூலானா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத், ஹரியானா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஜிண்டில் மக்கள் மத்தியில் தோன்றினார்.
வினேஷ் போகத் முன்னிலை
ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளரும் மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத் முன்னிலை வகிக்கிறார்.
ஹரியானாவில் மீண்டும் பாஜக முன்னணி
ஹரியானாவிலுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான முன்னணி நிலவரங்கள் வந்துள்ளன. அதன்படி, பாஜக 30 தொகுதிகளில் முன்னிலையும், காங்கிரஸ் 28 தொகுதிகளில் முன்னிலையும், இந்தியன் நேஷனல் லோக் தல் கட்சி ஒரு இடத்தில் முன்னிலையும் சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.
பின்தங்கிய ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர்
ஜம்மு காஷ்மீரின் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா நவ்ஷேரா தொகுதியில் பின்தங்கியுள்ளார் என்றும்; ஜம்மு - காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியின் சுரீந்தர் குமார் 2,797 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இரு தொகுதிகளிலும் முன்னணியில் இருக்கும் உமர் அப்துல்லா
காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, போட்டியிட்ட புட்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளார்.
முன்னணியில் காங்கிரஸ் - தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகம்
ஹரியானாவில் அமோக வெற்றியை நோக்கியும், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியும் முன்னணியில் இருப்பதாகவும் முன்னணி நிலவரங்கள் வெளியானதால், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர்.
தபால் வாக்குகள் எண்ணும் பணி விறுவிறு
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் காவல் துறை துணை ஆணையர் (டிசி) ராஜேஷ் குமார் ஷவான் கூறுகையில், "கிஷ்த்வாரில், தபால் வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடந்து வருகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் எங்களிடம் இல்லை. எல்லா நெறிமுறைகளையும் பின்பற்றி எண்ணும் பணி நடைபெற்று வருகிறது," என்கிறார்.
ஜம்முவில் யார் முன்னிலை?
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தின் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஸ்ரீநகரில் உள்ள எஸ்.கே.ஐ.சி.சியில் நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தின்படி, பாஜக 5 இடங்களிலும், ஜேகேஎன்சி 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
ஜம்மு வடக்கு தொகுதியில் யார் முன்னிலை?
தேர்தல் ஆணைய தகவலின்படி, ஜம்மு வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் ஷாம்லால் சர்மா முன்னிலை வகிக்கிறார்.
ஜம்மு காஷ்மீரி ல் யார் முன்னிலை
ஜம்மு காஷ்மீரில் காலை 8:45 நிலவரப்படி ஜம்மு காஷ்மீர் நேஷனல் கான்ஃபெரன்ஸ் கட்சி 31 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 26 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி நான்கு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
ஹரியானாவில் யார் முன்னிலை
ஹரியானாவில் காலை 8:45 நிலவரப்படி காங்கிரஸ் 54 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 21 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மற்றும் பிறகட்சிகள் மூன்று இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
சுயேச்சை வேட்பாளரின் நம்பிக்கை
ஜம்மு காஷ்மீரின் ஹப்பா கடல் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் நானாஜி டெம்பி கூறுகையில்,"மக்கள் என் மீது அன்பை பொழிந்துள்ளனர். நாங்கள் கடினமாக உழைத்துள்ளோம். மக்கள் என்னை ஆசீர்வதித்து எனது வெற்றிக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்காக நான் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது, அடுத்த நான்கைந்து மணி நேரத்தில் முடிவுகள் தெரிந்துவிடும்" என்று சுயேச்சை வேட்பாளர் கூறினார்.
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு வேண்டும் - சுயேச்சை எம்.பி.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் குறித்து சுயேச்சை எம்.பி. பொறியாளர் ரஷீத் கூறுகையில்,"நானே தேர்தலில் போட்டியிடவில்லை; சில சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் மக்களின் கருத்துகளைக் கேட்டு உண்மையான பிரச்னைகளான சுயாட்சி, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு, மனித உரிமைகளுடன் ஆட்சி, மற்றும் ஊழல் இல்லாத ஆட்சி ஆகியவற்றில் செயல்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் ," என்கிறார்.
தபால் வாக்குகள் எண்ணப்படும் பணி தீவிரம்
ஹரியானா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. கல்கா சட்டமன்றத் தொகுதியில், தபால் வாக்குகள் பஞ்ச்குலாவில் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை விறுவிறு!
ஹரியானாவின் பிவானி நகரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
அனைத்துக்கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்ட ஸ்ட்ராங்க் ரூம்
ஹரியானாவின் கர்னூல் பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் சரியாக 8 மணிக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங்க் ரூம் என்னும் வாக்குபெட்டிகள் வைக்கப்பட்ட மையத்தின் அறைப்பூட்டுகள் திறக்கப்பட்டன.
ஹரியானாவில் துஷ்யந்த் சௌதாலா தலைமையில் ஜெயிப்போம் - ஜனநாயக் ஜனதா கட்சியின் வேட்பாளர் அஞ்சனி லதா பேட்டி
ஹரியானா மாநிலம், எலனாபாத் தொகுதியின் ஜனநாயக் ஜனதா கட்சியின் வேட்பாளர் அஞ்சனி லதா செய்தியாளர்களிடம் பேசுகையில், 'எலனாபாத் மக்கள் எங்களை நம்பியுள்ளனர் என்று நான் நம்புகிறேன். துஷ்யந்த் சௌதாலா தலைமையில் நாங்கள் சட்டப்பேரவைக்கு செல்கிறோம்" என்கிறார்.
தொடங்கியது வாக்கு எண்ணிக்கை
ஹரியானா மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஹரியானாவில் உள்ள 22 மாவட்டங்களில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள 20 மாவட்டங்களில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளின் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைவிதி இன்று முடிவு செய்யப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
சமீபத்தில் நடந்து முடிந்த ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சரியாக 8 மணிக்குத் தொடங்கியது. இதில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான முடிவுகள் இன்று தெரியவரும்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சரியாக 8 மணிக்குத் தொடங்கியது. இதில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான முடிவுகள் இன்று தெரியவரும்.
10 ஆண்டுகால பாஜகவின் ஊழல் மக்களை வெறுக்க வைத்துவிட்டது - காங்கிரஸ் வேட்பாளர் ஆதித்ய சுர்ஜிவாலா
ஹரியானா மாநிலம், கைதால் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆதித்ய சுர்ஜிவாலா கூறுகையில், ‘’தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 60 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என்று வந்துள்ளது. ஆனால், நாங்கள் 70 தொகுதிகளில் வெல்வோம். இந்த கைதால் தொகுதியிலும் வெல்வோம். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்கள், அவர்களை மக்கள் மத்தியில் வெறுக்க வைத்துவிட்டது’’ என்றார்.
பிரார்த்தனை செய்த ஹரியானா முதலமைச்சர்
ஹரியானாவின் முதலமைச்சர் நயப் சிங் சைனி, வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன், பிரம்ம சரோவரில் உள்ள ஸ்ரீ தக்ஷின் முக்கி ஹனுமன் கோயிலில் மனமுருகப் பிரார்த்தனை செய்தார்.
ரோதக் நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், ரோதக் நகரின் மையப்பகுதியில் அதிகமான தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பரிசோதித்து வருகின்றனர்.
ஜனநாயக செயல்பாட்டின் இறுதிநிலையில் இருக்கிறோம் - ஜம்மு காஷ்மீரின் சுயேச்சை வேட்பாளர் பேட்டி
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் சுராஜ் சிங் பரிஹர் கூறுகையில், ‘’ மக்களின் வைராக்கியம் பெரியளவில் இருக்கிறது. இந்த ஜனநாயக செயல்பாட்டின் இறுதிநிலையில் இருக்கிறோம். வாக்கு எண்ணிக்கை நடப்பதால், வாக்களித்தவர்களும் தன்னை குறித்து அறிந்துகொள்ள ஆர்வமுடன் இருக்கின்றனர்’’ என்றார்.
இங்கு யாரும் பிரச்னை செய்யமுடியாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம் - ராஜ் அவுரி எஸ்.எஸ்.பி பேட்டி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜ் அவுரி பகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எஸ்.எஸ்.பி. ரந்தீப் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ‘இங்கு யாரும் பிரச்னை செய்யமுடியாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கப்பட்டவர்கள் மட்டுமே, பரிசோதனைகளுக்குப் பின் அனுமதிக்கப்படுவர். காவல் மற்றும் துணை ராணுவம் இரண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எங்களது கண்காணிப்பு கருவிகள் அனைத்தும் நல்ல முறையில் செயலாற்றுகின்றன. எல்லோரும் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறோம்’’ என்றார்.
ஹரியானாவில் காங்கிரஸ் வைத்த நம்பிக்கை
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம் என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நவ்ஷேரா தொகுதி பாஜக வேட்பாளரின் நம்பிக்கை!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் நவ்ஷேரா தொகுதியின் பாஜக வேட்பாளர் ரவீந்தர் ரைனா சற்றுமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாஜகவும் அதனது கூட்டணிக்கட்சிகளும் அறுதிப்பெரும்பான்மையுடன் ஜெயிக்கும் என்று தாங்கள் நம்புகிறோம் என்றும், பாஜக 30 முதல் 35 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஹரியானா முதலமைச்சரின் ஆர்வம்
ஹரியானா சட்டப்பேர்வை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ள நிலையில், ஹரியானாவின் முதலமைச்சரும் லத்வா தொகுதியின் பாஜக வேட்பாளருமான நயப் சிங், குரு ஷேத்திராவில் இருக்கும் சைனி சமாஜ் தர்மசாலா பகுதிக்கு ஆர்வமுடன் வருகை தந்தார். உடன் பாஜக தொண்டர்களும் இருந்தனர்.
ஸ்ரீநகரில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-ஐ-காஷ்மீர் உலக கூட்டரங்கு மையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களை மறித்து பரிசோதனையையும் செய்து வருகின்றனர், காவல்துறையினர்.
‘பாஜக ஆட்சியமைக்கும்’
பாஜக ஆட்சியமைக்கும் எனவும், மாலைக்குள் பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றும் தான் நம்புவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் துணை முதலமைச்சர் கவிந்தர் குப்தா தெரிவித்து இருக்கிறார்.
ஜம்மு - காஷ்மீரில் எப்போது தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை?
நடந்து முடிந்த ஜம்மு - காஷ்மீர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 8 மணி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது.
வழிபாட்டில் ஈடுபட்ட ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக வேட்பாளர்
ஜம்மு மற்றும் காஷ்மீரில், இன்று வாக்கு எண்ணிக்கையை ஒட்டி பாஹூ சட்டப்பேரவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் விக்ரம் ரந்த்வா, பாவே வாலி மாகாளி கோயிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
ஜம்மு - காஷ்மீரில் தீவிரப் பாதுகாப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்படவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அரியானா யாருக்கு?
அரியானாவில் ஆட்சியை பிடிப்பதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது
அரியானாவில் அரியணை யாருக்கு?
Election results 2024 : அரியானாவில் ஆட்சியை பிடிப்பதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இன்று அதற்கான விடை கிடைக்கும்
ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிப்பது யார்?
Election results 2024 : பரபரப்பான சூழலில் ஜம்மு காஷ்மீரில் இன்று ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரியவர உள்ளது.