Karnataka Election Results:'பாஜக அறுதிப் பெரும்பான்மை பெறும்' - பசவராஜ் பொம்மை நம்பிக்கை!
May 13, 2023, 09:12 AM IST
Karnataka CM Basavaraj Bommai: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை அமைக்கும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஹூப்ளியில் உள்ள அனுமன் கோயிலில் இன்று சிறப்புப் பூஜை செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், "இன்று பாஜகவுக்கு மிகப்பெரிய நாள். கர்நாடக மக்களின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. பாஜக அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன் பெரும் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை அமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடக்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமையுமா?.. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சொல்லப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த முதல்வர் பசவராஜ், "மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் இதுவரை எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை". என்று கூறினார்.
முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
தேர்தலுக்குப் பிறகு வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. கர்நாடகா தேர்தல் கருத்துக் கணிப்புகளை பார்த்தால் மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக 2வது இடத்திலும், ஜேடிஎஸ் மூன்றாவது இடத்தை பிடிக்கும் எனவும் கணிப்புகள் வெளியாகி இருந்தன. இதனிடையே கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜகவும், காங்கிரசும் முன்னும் பின்னுமாக மாறி மாறி முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9