HT Tech SPL: என்ன வேணும் உங்களுக்கு..? எல்லாமே இந்த செயலிகளில் இருக்கு!
Dec 25, 2023, 09:17 AM IST
இந்தச் செயலியில் நீங்கள் மளிகைப் பொருட்கள் முதல், துணிகள் வரை அனைத்தும் ஆர்டர் செய்து வாங்க முடியும்.
மளிகைப் பொருட்கள் முதல் அனைத்துப் பொருட்களையும் ஆன்லைனில் வாங்க முடியும் என்பதை அறிவோம். இதற்காக பிரத்யேகச் செயலிகளும் உள்ளன. அதாவது ஆன்லைனில் நாம் அமேஸான், ஃபிளிப்கார்ட், ஸ்நாப் டீல் என ஏகப்பட்ட இணைய வர்த்தக தளங்கள் உள்ளன.
இவை அனைத்துக்கும் செயலியும் உள்ளன. இதில் பெரும்பாலானவற்றை நாம் ஏற்கனவே உபயோகப்படுத்தி வருகிறோம். இதுகுறித்து அறியாதவர்களுக்கு இந்தக் கட்டுரை பயன்படும். அந்தச் செயலிகளை பார்ப்போம் வாங்க.
இந்தச் செயலியில் நீங்கள் மளிகைப் பொருட்கள் முதல், துணிகள் வரை அனைத்தும் ஆர்டர் செய்து வாங்க முடியும். நேரில் சென்று வாங்கிய காலம் மலையேறிப் போனது. ஸ்மார்ட்போனில் விரல்நுனியில் அனைத்தையும் வாங்கிவிடலாம் எனும் காலம் இப்போது வந்துவிட்டது.
மிகவும் பயனுள்ள வகையின் எளிமையான அணுகல் தன்மையைக் கொண்ட சில செயலிகள் இதோ.
அமேஸான்
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் அமேஸான். அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் கொண்ட இணைய வர்த்தகத் தளம்.
Amazon Shopping, UPI, Money Transfer, Bill Payment என பல வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது இந்தச் செயலி. நீங்கள் இந்தச் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொண்டு உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம்.
இந்த எண்ணிக்கையை படித்தீர்கள் என்றால் சற்று தலை சுற்றிப் போனாலும் போய்விடும். ஆம், 17 கோடிக்கும் அதிகமான பொருட்கள் விற்பனைக்காக அமேஸானில் காத்துக் கொண்டிருக்கிறது என்றொரு ஆய்வறிக்கை சொல்கிறது.
அமேஸான் பிரைம் என்றொரு செயலி உள்ளது. இது திரைப்படங்கள், இணையத் தொடர்கள் பார்ப்பதற்கு உதவும் செயலியாகும். இதில் நீங்கள் உறுப்பினர் ஆகிவிட்டால் அமேஸான் இணைய வர்த்தகத்தில் பல்வேறு சலுகைகளைப் பெறுவீர்கள்.
உதாரணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களை நீங்கள் ஆர்டர் செய்தால் அந்தப் பொருள் அடுத்த நாளே உங்கள் கைக்கு வந்துவிடும்.
பொதுவாக ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் வருவதற்கு 3 இல் இருந்து 7 நாள்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமேஸானில் பேடிஎம் செயலியைப் போன்று பில்களை செலுத்துவதற்கான ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் செல்போன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்துகொள்வது, கேஸ் சிலிண்டர் புக் செய்வது, மின் கட்டணம் செலுத்துவது என பல பணிகளை வீட்டில் இருந்தபடியே அலைச்சல் இல்லாமல் அமேஸான் செயலியிலேயே முடித்து விடலாம்.
இதுமட்டுமல்ல, ரயில் டிக்கெட், விமான டிக்கெட், திரைப்படங்களை பார்ப்பதற்கான டிக்கெட்டுகளையும் கூட முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
கார், பைக் இன்சூரன்ஸையும் கூட புதுப்பித்துக் கொள்ளலாம்.
'அமேஸான் பே' பயன்படுத்தி நாம் வாங்கும் பொருட்களுக்கான பணத்தையும் ஸ்கேன் செய்து செலுத்தலாம்.
கிஃப்ட் கூப்பனையும் உருவாக்கி நண்பர்களுக்கு பரிசளிக்கலாம்.
மொழித் தேர்வில் தமிழ் மொழியை நீங்கள் தேர்வு செய்துகொண்டு பயன்படுத்தலாம். பொருட்கள் சரியில்லை என்றால் ரிட்டன் செய்து பணத்தை திரும்பிப் பெறும் ஆப்ஷனும் உள்ளது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
அமேஸான் செயலியை சுமார் 100 மில்லியனுக்கு (10 கோடி) அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்நாப் டீல்
இந்தச் செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து திறந்த உடனேயே முதலில் மொழித் தேர்வு வருகிறது. நீங்கள் விருப்ப மொழியாக தமிழையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
பாப்புலர், ஃபார் யூ, பூஜை பொருட்கள் என பல பிரிவுகள் உள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் பிர்தயேகமான பொருட்கள் விற்பனைக்காக காத்திருககின்றன. பேபி&கிட்ஸ் பிரிவில் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களும், ஹெல்த் & பியூட்டி பிரிவில் அழகு சாதனப் பொருட்களும் கிடைக்கின்றன.
நமது மின்னஞ்சல் முகவரியை கொடுத்து கணக்கை உருவாக்கலாம். நாம் வாங்க வேண்டிய பொருளை ஷார்ட் லிஸ்ட் செய்து வைத்துக் கொண்டு பின்னர் வாங்கலாம்.
ஸ்பின் வீல் என்றொரு ஆப்ஷன் உள்ளது. அந்த வீலை நீங்கள் சுற்றினால் ஏதாவது ஆஃபர் கோடு கிடைக்கும். அதை நீங்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
இபே (Ebay)
பொருட்களை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் பாலமாக இருக்கும் மற்றொரு செயலி இபே செயலியாகும்.
இதிலும் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம்.
கேமரா, பைனாகுலர் முதல் பல பொருட்களை இங்கே வாங்க முடியும்.
ஃப்ளிப் கார்ட்
பல ஆஃபர்களை வழங்கும் மற்றொரு இணைய வர்த்தக செயலி. இந்தியாவில் இந்தியரால் தொடங்கப்பட்ட ஃபிளிப்கார்டை தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்தச் செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்த உடன் செல்போன் எண்ணை உள்ளீடு செய்துதான் உள்நுழைய வேண்டியது இருக்கும்.
சூப்பர் காய்ன் ஆப்ஷன், கேம்ஸ் பிரிவில் பல்வேறு விளையாட்டுகளும் இந்த செயலியில் நிறைந்திருக்கின்றன. ஃபிளிப் கார்ட் செயலியிலும் பழைய போன்களை விற்பதற்கான ஆப்ஷன்ல, கார், பைக் இன்சூரன்ஸை வாங்குவதற்கான ஆப்ஷன் என பல வசதிகள் உள்ளன.
மிந்த்ரா
Myntra Online Shopping App – Shop Fashion & more என்ற இந்தச் செயலி ஃபேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இயங்கிவரும் செயலியாகும்.
மிந்த்ரா தளத்தில் அடிதாஸ், புமா என பல முன்னணி பிராண்டுகளின் ஆடை வகைகள் விற்பனைக்காக உள்ளன.
காட்ஜெட்டுகளும், அழகு சாதனப் பொருட்களும் இங்கே கிடைக்கின்றன.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் இங்கே ஆடைகள் கிடைக்கின்றன.