HT Tech SPL: வெளியூரில் இருக்கீங்களா.. வீட்டில் சமைத்த உணவு தேவையா?
Dec 25, 2023, 09:13 AM IST
HT Technology Special: 'இது செயலி உலகம்' தொடரில் உங்களுக்கு பயனுள்ள செயலி குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. இந்த எபிசோடில் அப்படி ஒரு பயனுள்ள செயலி குறித்து தெரிந்து பயன் பெறுவோம்.
வெளியூரில் இருந்து பலர் இன்று சென்னை போன்ற நகரங்களில் வேலை செய்து வருகின்றனர். வீட்டில் அன்புடன் ருசியாக அம்மா, அத்தை, அக்கா, பாட்டி கைகளால் சமைக்கப்பட்ட சாப்பாட்டை சாப்பிட்டவர்களுக்கு எவ்வளவு விலை கொடுத்து உணவகங்களில் சாப்பிட்டாலும் திருப்தி ஏற்படாது.
சரி தங்கும் அறையில் இருந்து உணவை தயார் செய்து எடுத்துச் செல்வோம் என்றால் அதுவும் பலரால் முடியாத காரியமாக இருக்கிறது. அதற்கு போதிய நேரமின்மையும் காரணம். சமைக்க தெரியாது என்பது மற்றொரு காரணம்.
அதேநேரம், உணவகங்களில் அதிக செலவு செய்து சரியான சாப்பாடு கிடைக்காமல் போவதால் ஏற்படும் உபாதைகள் ஒருபக்கம்.
சரி இதற்கு என்னதான் தீர்வு. அங்குதான் உங்களுக்கு தொழில்நுட்பம் உதவ வருகிறது. எந்த ஊராக இருந்தாலும் வெறும் தொழிற்சாலைகளும், கம்பெனிகளும் மட்டும் இருப்பதில்லையே! வீடுகளும், வீட்டில் சமைப்பவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்.
வீட்டில் இருந்து சமைத்து கொடுப்பதற்கு பல பெண்மணிகள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வாடிக்கையாளரை தேடிச் செல்வது என்பது இயலாத ஒன்றாகவும் சவாலான ஒன்றாகவும் இருக்கிறது. அதேநேரம், நாங்க சமைக்க ரெடி.. வந்து வாங்கிட்டு காசு கொடுத்தா போதும் என நினைக்கும் பெண்மணிகளும் இருக்கவே செய்கிறார்கள்.
ஒரு பக்கம் வீட்டுச் சாப்பாடு வேண்டுபவர்கள், மறுபக்கம் வீட்டில் சமைக்க ரெடியாக இருப்பவர்கள் இவர்களை ஒன்றிணைக்கிறது Cookr : Celebrate Home Food செயலி.
இதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தச் செயலியை பதிவிறக்கினால் உங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் சமைத்துக் கொடுக்க தயாராக இருப்பவர்களின் பெயர்களும் அவர்கள் செய்து தரும் டிஷ்களும் பட்டியலிடப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட Zomato, Swiggy போன்று தான் இந்தச் செயலி வடிவமைப்பு இருக்கிறது.
ஆனால், அவற்றுக்கும் இதற்கு உள்ள வித்தியாசம், இந்தச் செயலியில் வீட்டில் தயாரிக்கப்படும் உணவு மட்டுமே கிடைக்கும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
உங்கள் செல்போன் எண்ணை கொடுத்து லாகின் செய்துகொள்ளுங்கள்
எந்த நாளில் உங்களுக்கு சாப்பாடு வேண்டும் என்பதை தேதியை தேர்வு செய்வது மூலம் உறுதிப்படுத்துங்கள்
உங்களுக்கு பிடித்த உணவுகளை தேர்வு செய்து பேமெண்ட் செலுத்தி ஆர்டர் செய்யுங்கள். அவ்வளவுதான்.
இந்தச் செயலியில் இருக்கும் சிறப்பு நீங்கள் தொடர்ச்சியாக எதிர்வரும் நாட்களுக்கு முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ள முடியும்.
அவ்வளவுதான், நீங்கள் இருக்கும் இடம் தேடி உணவு உங்கள் கைக்கு வரும்!
என்ன இந்த ஐடியா நல்லா இருக்குதானே!
டாபிக்ஸ்