HT Elections Story: ‘நாடாளுமன்ற தேர்தல் 1991!’ தீர்ப்பை மாற்றிய ராஜீவ் படுகொலை! பிரதமர் ஆன நரசிம்மராவ்!
Feb 14, 2024, 06:15 AM IST
”Lok Sabha Election 1991: நாடு இக்கட்டான பொருளாதார சிக்கலில் இருந்த காலத்தில் பொருளாதார சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு உலகமயம், தாராளமயம் அமலாக்கியதன் மூலம் நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்டவராக நரசிம்மராவ் இன்று வரை நினைவுக்கூறப்படுகிறது”
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்டது. நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.
இந்திய குடியரசு
நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.
காங்கிரஸின் தொடர் வெற்றிகள்
1952, 1957, 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தல்களில் வென்று ஜவஹர்லால் நேரு பிரதமர் ஆக இருந்தார். 1964 ஆம் ஆண்டு நேரு இறந்த நிலையில் லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். சாஸ்திரியின் மறைவுக்கு பிறகு 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் ஆகி இருந்தார். 1967, 1971 ஆகிய தேர்தல்களில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார்.
ஜனதா எழுச்சியும்! வீழ்ச்சியும்!
1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து வந்த சரண்சிங் அரசால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாததால் ஆட்சி தாமாகவே கவிழ்ந்தது.
அடுத்த வாரிசாக வந்த ராஜீவ் காந்தி!
1980ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தனது சொந்த பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்சியையும், அனுதாபங்களையும் ஏற்படுத்தியது. அடுத்து நடந்த தேர்தலில் வென்று ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார்.
இறுப்பினும் ஆட்சி மீதான அதிருப்தி காரணமாக 1989 தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் பெரும்பான்மை இடங்களில் வெல்ல முடியவில்லை. மொத்தம் இருந்த 531 தொகுதிகளில் 197 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஜனதாதளம் 143 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 33 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. ராஜீவ் காந்தி அமைச்சர் அவையில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கிய வி.பி.சிங் பிரதமர் ஆனார்.
பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த முடிவு செய்த போது ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்த பாஜகவின் கடும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது, வடமாநிலங்களில் உயர்சாதியை சேர்ந்த இளைஞர்கள் கடும் போராட்டங்களை நடத்தினர்.
மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டக்கோரி வட மாநிலங்களில் பாஜகவின் அத்வானி நடத்திய ரதயாத்திரை பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அவரை கைது செய்ததால் வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது.
1990 நவம்பரில் விபிசிங் பதவி விலகினார். பின்னர் ராஷ்டிரிய சமாஜ்வாதி ஜனதா கட்சியை சேர்ந்த சந்திரசேகர் அவை உறுப்பினர்களின் ஆதரவு பெற்று பிரதமர் ஆனார். அவருக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்தது.
223 நாட்கள் வரை பிரதமராக இருந்த சந்திரசேகர் அரசுக்கு காங்கிரஸ் கட்சி அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், மே மாதம் 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதனால் தேர்தல் நாட்கள் ஜூன் நடுப்பகுதி வரை ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ராஜிவ்காந்தி படுகொலைக்கு முன்னரே மொத்தமுள்ள 534 தொகுதிகளில் 211 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு நடந்து முடிந்து இருந்தது. பின்னர் நடந்த வாக்குப்பதிவில் காங்கிரஸ் கட்சிக்கு அனுதாப அலையை உருவாக்கி இருந்தது.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், 232 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக 120 இடங்களிலும், ஜனதா கட்சி 59 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி 35 இடங்களிலும் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக - காங்கிரஸ் கூட்டணி முழு இடங்களையும் கைப்பற்றியது. அனைத்து இடங்களிலும் திமுக தோல்வி அடைந்தது.
அரசியல் வாழ்கையில் இருந்து ஓய்வு பெற நினைத்த மூத்த காங்கிரஸ் தலைவர் பி.வி.நரசிம்மராவ் பிரதமர் ஆனார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி சார்பில் லால்பகதூர் சாஸ்திரிக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.
சிறுபான்மை அரசுக்கு தலைமை தாங்கி முழு 5 ஆண்டுகளையும் வெற்றிகரமாக முடித்த பெருமையும் அவருடன் சேர்ந்து கொண்டது.
நாடு இக்கட்டான பொருளாதார சிக்கலில் இருந்த காலத்தில் பொருளாதார சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு உலகமயம், தாராளமயம் அமலாக்கியதன் மூலம் நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்டவராக நரசிம்மராவ் இன்று வரை நினைவுக்கூறப்படுகிறது.