Durgabai Deshmukh: சுதந்திர போராட்ட வீராங்கனை, பெண்ணியவாதி துர்காபாய் தேஷ்முக் பிறந்த நாள் இன்று!
Jul 15, 2023, 06:10 AM IST
பால் ஹாஃப்மேன் விருது, நேரு லிட்ரரி விருது, யுனெஸ்கோ விருது, பத்மபூஷன் விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இவரை சமூக சேவைகளின் அன்னை என்று புகழ்ந்தார்.
சுதந்திர போராட்ட வீராங்கனை, பெண்ணியவாதி, வழக்கறிஞர் என பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை துர்காபாய் தேஷ்முக் அவர்களின் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த முக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி துர்க்காபாய் தேஷ்முக் அவர்களை தன் குரு என்று கவுரவித்தார்.
யார் இந்த துர்காபாய் தேஷ்முக்
ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரியில் கடந்த 1909 ஜூலை 15ம் தேதி பிறந்தார். இவர் அந்த காலத்தில் பெண்களுக்கு இருந்த தடைகளை எதிர்த்து விடாப்பிடியாக கல்வி கற்றார். பக்கத்து வீட்டில் இருந்த ஆசிரியரின் உதவியுடன் இந்தி மொழியையும் கற்று தேர்ந்தார்.
சிறு வயது முதல் துணிச்சலாக சமூக அநீதிகளை எதிர்த்தார். பின்நாட்களில் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். மாகாத்மா காந்தியடிகள் 1921ல் காக்கி நாடா வந்த போது 10 நிமிடங்கள் அரை பார்க்க அனுமதி பெற்றார். ஆனால் இவரது பேச்சாற்றலை கண்ட காந்தி சுமார் ஒரு மணிநேரம் பேசினார். இதையடுத்து துர்காபாய் தேஷ்முக் மீது காந்திஜிக்கு மிகுந்த அன்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து காந்திஜியின் இந்தி சொற்பொழிவுகளை தெலுங்கில் மொழி பெயர்த்தார்.
கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட துர்காபாய் தேஷ்முக் 1923ல் பெண்களுக்கான பள்ளியை தொடங்கினார். காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆங்கில அறிவை வளர்க்க பயன்படுத்திக்கொண்டார்.
இதையடுத்து பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் ஆலோசனையுடன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பயின்று மெட்ரிக் தேர்வு எழுதினார். பின் இளங்களை, முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னாட்களில் தன் வீட்டின் ஒரு பகுதியை கல்விக்கூடமாக மாற்றி தன் தாயை அங்கு ஆசிரியராக பணியாற்ற வைத்தார்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக 1938ல் மகிளாசபையை தொடங்கினார். இதன் மூலம் மருத்துவமனை, தாய் சேய் நல விடுதி, செவிலியர் பயிற்சி மையம், கலை மற்றும் கல்வி மையங்கள் தொடங்கப்பட்டது. ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி உட்பட பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்.
1942 ல் சட்டம் பயின்றார். இதையடுத்து குற்றவியல் துறையில் சிறப்பு பயிற்சி பெற்று வெற்றிகரமான வழக்கறிஞராக பணியாற்றினார். இந்திய நாட்டில் முதல் முறையாக குடும்ப நீதிமன்றங்கள் தொடங்க அடித்தளம் அமைத்தார்
1946ல் அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு மற்றும் தற்காலிக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின் 1962ல் ஒடுக்கப்பட்ட நலிவுற்ற பெண்கள் நலனுக்காக துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையை தொடங்கினார். திட்டகமிஷன் உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது.
அவர் பத்திரிகை துறையையும் விட்டுவைக்கவில்லை. ஆந்திர மகிளா பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். இப்படி தன் வாழ் நாள் முழுவதும் பெண்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டார். அதேசமயம் இந்திய சமூகத்தில் புறையோடியிருந்த மூட நம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தார்.
பால் ஹாஃப்மேன் விருது, நேரு லிட்ரரி விருது, யுனெஸ்கோ விருது, பத்மபூஷன் விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இவரை சமூக சேவைகளின் அன்னை என்று புகழ்ந்தார்.
தி ஸ்டோன் தட் ஸ்பீகத் என்ற நூலை எழுதினார். துர்காபாய் தேஷ்முக்கின் சுயசரிதை நூல் கடந்த 1981ல் வெளியானது. அதே ஆண்டு துர்காபாய் தேஷ்முக் மே 9ந்தேதி இயற்கை எய்தினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்