Chhattisgarh Elections 2023: நக்சல் தாக்கம் நிறைந்த சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது! காங்-பாஜக இடையே கடும் போட்டி!
Nov 07, 2023, 07:15 AM IST
Chhattisgarh Assembly election 2023: 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
ஐந்து மாநிலத் தேர்தல்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மிசோரம் மாநிலத்திலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலும் நடைபெறுகிறது.
90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், 2 லட்சத்து 63ஆயிரத்து 829 முதல்முறை வாக்காளர்கள் உட்பட மொத்தம் 5 கோடியே 61 லட்சத்து 36 ஆயிரத்து 229 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பஸ்தார் கோட்டத்தைச் சேர்ந்த 12 தொகுதிகள் உட்பட 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 20 தொகுதிகள் நக்சல்பாதிக்கப்பட்ட பஸ்தார் பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களிலும், ராஜ்நந்த்கான், மோஹ்லா-மன்பூர்-அம்பாகர் சௌகி, கபீர்தாம், மற்றும் கைராகர்-சூய்காடன்-கண்டாய் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
அந்தகர், பானுபிரதாப்பூர், கன்கெர், கேஷ்கல், கோண்டகான், நாராயண்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர் மற்றும் கோண்டா உள்ளிட்ட 12 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மீதமுள்ள மூன்று தொகுதிகளான பஸ்தர், ஜக்தல்பூர் மற்றும் சித்ரகோட் ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நக்சல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 600க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. முன்னதாக நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்ட பஸ்தார் பகுதியில் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சல் கிளர்ச்சியாளர்கள் வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.