Tamil Live News Updates : கோவையில் பிரபல வணிக நிறுவனத்தில் தீ விபத்து
Jul 12, 2023, 10:55 PM IST
Tamil Live News Updates : இன்றைய (12.07.2023) செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்!
கோவையில் பிரபல வணிக நிறுவனத்தில் தீ
கோவை காந்திபுரத்தில் பிரபல வணிக நிறுவனத்தில் திடீர் தீ விபத்து, அலறி அடித்து வாடிக்கையாளர்கள் வெளியேறினர்.
இந்தியா-பிளேயிங் லெவன்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இஷான் கிஷான் மற்றும் யஷஸ்வி ஜெய்ஷ்வால் இந்திய அணியில் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.
நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் இருவர் கைது
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் நெல்லை கிளை இயக்குநர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் கடிதம்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பூயூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார். மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் உற்பத்தி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
விஜய் சேதுபதியின் 50வது படம்
நடிகர் விஜய்சேதுபதியின் 50வது திரைப்படத்துக்கு ‘மகாராஜா’ என பெயரிடப்பட்டுள்ளது.
முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தல் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூ.2 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
பீடி இலைகள் கடத்த முயற்சி
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு 40 மூட்டைகளில் பீடி இலைகள் கடத்த முயற்சி நடந்தது. க்யூ பிரிவு போலீசாரை கண்டதும் படகில் இருந்து தப்பிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 40 மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மநீம அறிவிப்பு
மநீம கட்சி சார்பாக தென் சென்னை, கோவை, மதுரை ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கான வார்டு பொறுப்பாளர்களாக செயல்பட விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரன் படக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் மாவீரன் படக்காட்சிகளை மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் படக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனல்களில் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐஜேகே தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் நேரத்தில் மாற்றமில்லை - அமைச்சர் விளக்கம்
அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பு!
“டாஸ்மாக் கடைகளில் நேர மாற்றம் கிடையாது, வழக்கம்போல் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும். டெட்ரா பேக்கில் மதுபானங்கள் விற்பனை செய்வது குறித்து அனைவரிடமும் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும்போது அரசின் கொள்கையைக் கவனத்தில் கொண்டு பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயில், பள்ளிகளுக்குப் பக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.” - அமைச்சர் முத்துசாமி
செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு
அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, வழக்கு ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஹசரங்கா சிறந்த வீரர்
ஐசிசி-ன் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ஹசரங்கா வென்றார்.
செந்தில் பாலாஜிக்கு 26ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
பெண் யானை உயிரிழப்பு
கோவை மாவட்டம் மாங்கரை அருகே தடாகம் காப்புக்காடு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழப்பு
கனமழை எதிரொலி - டெல்லியில் 144 தடை உத்தரவு
டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது
மகளிர் உரிமை தொகை பெற கைவிரல் ரேகை அவசியம்…!
தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை பெற கைவிரல் ரேகை பதிவு அவசியம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சிறுநீர் கழித்த விவகாரம் - சர்ச்சை பேச்சு
ஒருவர் மீது சிறுநீர் கழிப்பதில் என்ன குற்றம் இருக்கிறது? எந்த சட்டத்தின் கீழ் இது குற்றச்செயல்? மேலும் தஷ்மத் ராவத் (பாதிக்கப்பட்டவர்) அன்று மதுபோதையில் இருந்துள்ளார். பொது இடத்தில் மது அருந்துவதும் குற்றம்தான். அவர் மீதும் வழக்கு பதியுங்கள். பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்த விவகாரத்தில், அவருக்கு ஆதரவாக பிராமண மகாசபாவின் தேசிய தலைவர் குல்தீப் பரத்வாஜ் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
பக்தர்கள் பாதுகாப்பாக திரும்புவார்கள் - அமைச்சர்
அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் பாதுகாப்பாக திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் KKSSR ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கட்சியினரில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதியா?
சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேருக்கும் மன்னிப்பு கடிதம் பொருந்தாது; மற்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து இபிஎஸ் முடிவு செய்வார்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தனியார் உணவகத்தில் தீ
கோவை காந்தி புரம் பகுதியில் தனியார் உணவகத்தில் தீ. அதை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொது சிவில் சட்டத்திற்கு திமுக கடும் எதிர்ப்பு
சிறுபான்மை மக்களை பாதிக்கும் ஒன்றாக மட்டும் பொது சிவில் சட்டத்தை பார்க்கக்கூடாது. பெரும்பான்மை இந்து மதம் சார்ந்த பட்டியல் இன மக்களின் பழக்க வழக்கங்கள், திருமணம் தொடர்பான சடங்கு, சம்பிரதாயங்களையும் பொது சிவில் சட்டம் அழித்துவிடும்.
மதங்களுக்கு இடையேயான பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் முன் மத்திய அரசு இந்த மத சாதிகளுக்கு இடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்று சாதீய ஏற்றத்தாழ்வை சமன் செய்ய வேண்டும்.
சட்ட ஆணையத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம்
பொதுசிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதசார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும். சட்டம் – ஒழுங்கு பாதிப்பு அமைதியின்னை போன்ற பல கேடுகளை அது இந்திய சமூகத்தில் உருவாக்கும். இந்த சட்டம் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளை பறிக்கும் முயற்சியாகும்.
பெங்களூருவில் அவசரமாக தரையிறங்கிய சொகுசு விமானம்
பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர கதியில் தரையிறக்கப்பட்ட தனியார் சொகுசு விமானம். பெரும் விபத்தை தவிர்க்க ஓடுதளத்தில் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால், விமானத்தின் முன்பக்கம் மட்டும் சேதமானது.
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை மதுரை இடையே 4 விமானங்கள் ரத்து
சென்னை மதுரை இடையே இன்று இயக்கப்பட இருந்த 4 விமானங்களின் சேவை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பெய்யும் கனமழையால் அங்கிருந்து சென்னை வர வேண்டிய விமானங்கள் தாமதம் அடைந்துள்ளது. இந்நிலையில் பகல் 1 மணி முதல் மாலை 4.40 மணிக்குசென்னை வர வேண்டிய இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிராம் தங்கம் ரூ.18 உயர்ந்து ரூ. 5,500க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 12) சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.44,000, க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 உயர்ந்து ரூ. 5,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று வெள்ளிவிலை 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் 77.ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ100 குறைந்து 77,000ஆகவும் விற்பனை ஆகிறது.
ரூ1.50 லட்சம் மதிப்புள்ள கேமராவை திருடிய மர்ம நபர்
புதுச்சேரியில் லீமகவுண்டன்பாளையத்தில் போட்டோ ஸ்டுடியோவை உடைத்து ரூ1.50 லட்சம் மதிப்புள்ள கேமராவை அடையாளம் தெரியாத நபர் திருடி உள்ளார். இந்நிலையில் சிசிடிவி காட்சி அடிப்படையில் திருடர்களை தேடி வருகின்றனர்.
தேனியை சேர்ந்த 21 பேர் காஷ்மீரில் சிக்கி தவிப்பு
அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்துவிட்டு திரும்பிய வழியில், ஜம்மு - ஸ்ரீநகர் இடையே நிலச்சரிவு ஏற்பட்டதால், தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் உத்தமபாளையத்தை சேர்ந்த 21 பேர் காஷ்மீரில் சிக்கித் தவிக்கின்றனர்.
பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள தங்களை மீட்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்
தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 9ம் தேதிக்கான ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில், சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் மற்றும் திருநெல்வேலி செல்லும் நெல்லை விரைவு ரயில்களில் படுக்கை டிக்கெட்கள் விற்று தீர்ந்தன
கவுன்டர்களில் தற்போது தொடங்கியது ரயில் முன்பதிவு!
தீபாவளி பண்டிகையை ஒட்டி, நவம்பர் 9ம் தேதி சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான ரயில் முன்பதிவு, கவுன்டர்களில் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் IRCTC இணையதளத்தில் 10 மணிக்கு தொடங்குகிறது.
நவம்பர் 10ம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 13 தேதி முதலும், நவம்பர் 11ம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 14 முதலும், நவம்பர் 12ம் தேதி பயணிப்பதற்கு ஜூலை 15 முதலும் பயணிகள் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் அப்டேட்
இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடக்கம். மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
ஜெயிலர் படத்திற்காக மதுரையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் 60 அடி நீள போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
நாளுக்கு நாள் உயரும் தக்காளி விலை
கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி பலி
மதுராந்தகத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த நபர், ரயிலில் சிக்கி உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து திருப்பதி சென்ற ரயிலில் பயணித்த அவர், மதுராந்தகத்தில் இறங்கி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தபோது, ரயில் கிளம்பியதால், ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை குடிநீர் ஏரிகளின் நிலவரம்
• 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 2,272 மில்லியன் கனஅடியாக உள்ளது
• 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், நீர்இருப்பு 132 மில்லியன் கனஅடியாக உள்ளது
• 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில், நீர்இருப்பு 386 மில்லியன் கனஅடியாக உள்ளது
தீபாவளி பண்டிகை - ரயில்களில் முன்பதிவு
தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. பயணிகள் காலை 8 மணி முதல் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. வரும் தேர்தல்களுக்காக அமைச்சரவையல் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ கவுன்சிலிங் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
நீட் தேர்வில் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnmedicalselection.net/ மூலம் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மருத்துவ கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவதால் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.