Chhattisgarh Results 2023: யூகங்களை உடைத்த பாஜக.. காங். கோட்டை விட்டது எப்படி? - சத்தீஸ்கர் நிலவரம்!
Dec 03, 2023, 06:30 PM IST
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தான் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்த நிலையில், அங்கு பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் நவம்பர் 30ஆம் தேதியோடு பல கட்டங்களாக நடந்து முடிந்தது. மிசோரமை தவிர்த்து 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மட்டும் இன்று (டிச.03) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. அதன்படி, சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தற்போதைய நிலவரம் வரை பாஜக 54 தொகுதிகளிலும், ஆளும் கட்சியான காங்கிரஸ் 36 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய தேவை உள்ள நிலையில், பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அங்கு பாஜகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.
ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன. அரசியல் விமர்சகர்களும் அதே கருத்தைத் தான் பதிவு செய்திருந்தார்கள். ஆனால், அவற்றைத் எல்லாம் தவிடுபொடியாக்கி மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது பாஜக.
கடந்த 2003-ல் இருந்து தொடர்ந்து 3 முறை சத்தீஸ்கரில் ஆட்சி செய்த பாஜக, 2018-ல் படுதோல்வி அடைந்திருந்தது. வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழந்திருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக 55 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதற்கு மதுபான கொள்முதல் ஊழல், மகாதேவ் சூதாட்ட செயலி சர்ச்சை ஆகியவை ஆளும் கட்சி எதிராக திரும்பியதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, மகாதேவ் சூதாட்ட செயலி வாயிலாக ரூ.5,000 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதாகவும், அந்த செயலி நிறுவனத்திடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி பெற்றதாக அசிம் தாஸ் என்ற பணப் பரிமாற்றம் செய்பவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. தேர்தல் செலவுகளுக்காக இந்த பணம் பெறப்பட்டது எனவும் அமலாக்கத் துறை கூறியது சத்தீஸ்கர் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இது தற்போதைய தேர்தலில் வெகுவாகப் பிரதிபலித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்