Karnataka Election Results: பசவராஜ் பொம்மை, சி.டி.ரவி, எடியூரப்பாவின் மகன் முன்னிலை!
May 13, 2023, 11:41 AM IST
Karnataka Election Results 2023: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகன வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன . வாக்கு எண்ணிக்கையையொட்டி, கர்நாடக மாநிலம் முழுவதும் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, முதல்கட்டமாக தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக 88 தொகுதிகளிலும், காங்கிரஸ் 76 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
ஷிக்கான் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜேயேந்திர எடியூரப்பா ஷிகாரிபுரா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி சிக்கமகளூரு தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
தேர்தலுக்குப் பிறகு வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. கர்நாடகா தேர்தல் கருத்துக் கணிப்புகளை பார்த்தால் மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக 2வது இடத்திலும், ஜேடிஎஸ் மூன்றாவது இடத்திலும் இருக்கும் எனக் கணித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்