இந்தி தெரியாதா?..டி.ஆர்.பாலுவிடம் சீறிய நிதிஷ் குமார் - நடந்தது என்ன?
Dec 20, 2023, 04:34 PM IST
DMK vs Nitish Kumar: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஆவேச பேச்சு இப்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.
திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து 'இந்தியா' என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திமுக தரப்பில் ஆங்கில மொழி பெயர்ப்பு கேட்கப்பட்டது. நிதிஷ் குமார் பேசுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறும்படி டி.ஆர்.பாலு, ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.பி., மனோஜ் ஜாவிடம் கூறினார். அவரும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறினார். இதனால் கோபப்பட்ட நிதிஷ் குமார், "நாம் இந்தியாவில் வாழ்கிறோம், ஹிந்தி தான் நமது தேசிய மொழி அனைவரும் அதனை அறிந்திருக்க வேண்டும்." என கோபத்துடன் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், 'டி.ஆர்.பாலு எத்தனை ஆண்டு அரசியலில் இருக்கிறார். எம்.பி.யாக பலமுறை இருந்துள்ளார். அவருக்கு ஹிந்தி தெரியத்தானே செய்யும். தெளிவாக புரிய வேண்டும் என்றால் இந்தி படிக்க சொல்லுங்கள்." என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மற்ற தலைவர்கள் நிதிஷ் குமாரை சமாதானப்படுத்திய பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. நிதிஷ் குமாரின் இந்த ஆவேசம்தான் இப்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்