Azam Khan: தனித்தனி சிறைகளுக்கு மாற்றப்பட்ட அசம் கான், மகன் அப்துல்லா
Oct 24, 2023, 10:38 AM IST
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம் கான் மற்றும் அவரது மகன் அப்துல்லா அசம் தனித்தனி சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம் கான் மற்றும் அவரது மகன் அப்துல்லா அசம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர், அதிகாரிகள் கூறுகையில், அசம் கான் சீதாபூர் மாவட்ட சிறைக்கும், அவரது மகன் அப்துல்லா ஹர்தோய் மாவட்ட சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.என்.சபாத், “தந்தை-மகன் இருவரும் தனித்தனி போலீஸ் வாகனங்களில் போதிய பாதுகாப்புடன் சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரும் அதிகாலை 4:40 மணியளவில் ராம்பூர் சிறையில் இருந்து வெளியேறி காலை 9 மணியளவில் தங்கள் இருப்பிடத்தை அடைந்தனர்" என்றார்.
ராம்பூர் சிறையிலிருந்து வெளியேறும் போது, அசம் கான் செய்தியாளர்களிடம் "தனக்கும் தனது மகனுக்கும் "எதுவும்" நடக்கலாம். நாங்கள் என்கவுன்டரில் கொல்லப்படலாம்" என்றும் கூறினார்.
அசம் கானை சீதாப்பூர் சிறைக்கு அழைத்துச் செல்லும் எஸ்யூவியின் பின் இருக்கையின் நடுவில் உட்காருமாறு காவல்துறை அதிகாரிகள் கேட்டபோது, சமாஜ்வாதி மூத்த தலைவர் அசம் கான், அவரை ஜன்னல் இருக்கையில் அமர அனுமதிக்குமாறு வலியுறுத்தினார்.
"நான் நடுவில் உட்கார முடியாது," என கூறி முதுகு தொடர்பான பிரச்சனைகளை மேற்கோள் காட்டினார் அசம் கான்.
அசம் கான் இதற்கு முன்பு சீதாப்பூர் சிறையில் பல வழக்குகளில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அடைக்கப்பட்டார், அதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பிறகு மே 2022 இல் விடுவிக்கப்பட்டார்.
கடந்த வாரம், உத்தரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் நீதிமன்றம், 2019 ஆம் ஆண்டு போலி பிறப்பு சான்றிதழ் வழக்கில் அசம் கான், அவரது மனைவி தசீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. மேலும் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் ஷோபித் பன்சால், எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்திற்கு தலைமை தாங்கி, மூன்று பேருக்கும் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். மேலும் 3 பேருக்கும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜனவரி 3, 2019 அன்று, பாஜக எம்எல்ஏ ஆகாஷ் சக்சேனா ராம்பூரில் உள்ள கஞ்ச் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அசம் கானும் அவரது மனைவியும் தங்கள் மகனுக்கு இரண்டு போலி பிறப்புச் சான்றிதழ்களைப் பெற உதவினார்கள், ஒன்று லக்னோவிலிருந்தும் மற்றொன்று ராம்பூரில் இருந்தும் என்பது தான் அந்தப் புகார்.
ராம்பூர் நகராட்சியால் வழங்கப்பட்ட சான்றிதழில், அப்துல்லா அசமின் பிறந்த தேதி ஜனவரி 1, 1993 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற சான்றிதழில் அவர் செப்டம்பர் 30, 1990 அன்று லக்னோவில் பிறந்தார் என்று உள்ளது.
டாபிக்ஸ்