தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Election Results 2023: 'சனாதனத்தை எதிர்த்தால் இதுதான் நடக்கும்' - காங்கிரஸ் தலைவர் ஆசார்யா சுளீர்!

Election Results 2023: 'சனாதனத்தை எதிர்த்தால் இதுதான் நடக்கும்' - காங்கிரஸ் தலைவர் ஆசார்யா சுளீர்!

Karthikeyan S HT Tamil

Dec 03, 2023, 02:00 PM IST

google News
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை வகுத்து வரும் நிலையில், இத்தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் கருத்து தெரிவித்துள்ளார். (ANI)
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை வகுத்து வரும் நிலையில், இத்தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை வகுத்து வரும் நிலையில், இத்தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. சத்தீஸ்கரிலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த நிலையில், சனாதன தர்மத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இந்த தேர்தலுக்காக ராகுல் காந்தி மிகவும் கடினமாக உழைத்தார். ஆனால், மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. ராகுல் காந்தி தன்னால் முடிந்ததை செய்தார். பாரத் ஜோடோ யாத்திரையில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் அவர் நடந்தே சென்றார். ராகுலை குறை கூறுவது சரியல்ல. ஒரு மனிதன் கடினமாக உழைக்க முடியும். ஆனால், முடிவு கடவுளின் கையில் உள்ளது. ஜனநாயகத்தில் மக்களே கடவுள்.எங்கள் பிரார்த்தனையையோ, ராகுல் காந்தியின் சேவையையோ மக்கள் ஏற்கவில்லை என்றால், அவர்களை குறை கூறுவது சரியல்ல." என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "சனாதன தர்மத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் எதிர்ப்பதால் காங்கிரஸ் தோல்வியின் விளிம்பில் உள்ளது. மகாத்மா காந்தியின் வழியில் சென்ற காங்கிரஸ் கட்சியை மார்க்ஸ் வழியில் கொண்டு செல்லும் முயற்சியின் விளைவு இது. சனாதனத்தை எதிர்த்து இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது. சனாதனத்தின் அழிவை அறிவிப்பவர்களுடன் காங்கிரஸ் கட்சி நிற்கிறது. இதன் காரணமாக இக்கட்சியை மகாத்மா காந்தியின் பாதையில் செல்லும் கட்சி என்று கூற முடியாது. மகாத்மா காந்தி ஒரு உண்மையான மதச்சார்பின்மைவாதி. சனாதன தர்மத்தை எதிர்த்ததால் காங்கிரஸ் கட்சியை மூழ்கடித்து விட்டது. சாதிவாரி அரசியலை நாடு ஏற்காது, சனாதனத்தை எதிர்த்தால் இதுதான் நடக்கும்." என்று தெரிவித்துள்ளார்.

ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங்கிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை