மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 எம்.பிக்கள் சஸ்பெண்ட் ரத்து
Aug 01, 2022, 04:13 PM IST
மக்களவையில் 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை சபாநாயகர் ஓம் பிர்லா ரத்து செய்து அறிவித்துள்ளார்.
புதுதில்லி: காங்கிரஸ் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேரின் இடைநீக்கத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ரத்து செய்து அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அவையில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன.
இதனிடையே ஜூலை 25ஆம் தேதி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி-க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் உள்ளிட்டோர் விலைவாசி உயர்வு குறித்த போராட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட நான்கு எம்.பி-க்களையும், மழைக்காலக் கூட்டத்தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து எம்.பி-க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் உள்பட பலர் 50 மணிநேர தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் அவை கூடியவுடன், காங்கிரஸ் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேரின் இடைநீக்கத்தை திரும்ப பெறுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். அவையின் உள்ளே மீண்டும் பதாகைகள் காட்டப்பட்டால் விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக தி.மு.க எம்.பி-க்கள் உள்பட 23 பேர் கடந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்