தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி: நேபாள் சமையல் கலைஞர் கைது

ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி: நேபாள் சமையல் கலைஞர் கைது

Karthikeyan S HT Tamil

May 02, 2022, 03:34 PM IST

google News
திருவனந்தபுரம்: கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்: கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் செருவாத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கரிவல்லூரை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகள் தேவநந்தா பிளஸ் 2 படித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தேவநந்தாவும் அவருடைய பள்ளியில் படிக்கும் 18 பேரும் செருவாத்தூர் பேருந்து நிலையத்தில் குளிர்பானக் கடையோடு இயங்கி வந்த ஒரு கடையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஷவர்மா சாப்பிட்ட சிறிது நேரத்திலே ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்துள்ளனர்.

இதையடுத்து அனைவரும் காசர்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிசிச்சை அளித்து வந்தனர். உணவு விஷத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக மாணவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தேவநந்தா நேற்று மாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயரிழந்தார். மீதமுள்ள 17 மாணவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் சீராக உள்ளதாக மருத்துவமனை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷவர்மா விற்கப்பட்ட கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அங்கிருந்த ஷவர்மாவின் மாதிரிகளை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஷவர்மா கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே போலீசாரும் ஷவர்மா கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தேவநந்தா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஷவர்மா சமைத்த நேபாளம் நாட்டு சமையல் கலைஞர் சந்தோஷ் ராய் மற்றும் கடையின் மேலாளர் அனஸ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதால் அவரையும் அழைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஷவர்மா எனப்படும் உணவு பொதுவாகவே குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அரபு உணவாகும். ரொட்டிக்குள் கோழி இறைச்சித் துண்டுகள், முட்டைக்கோஸ், மசாலா பொருட்கள் சேர்த்து வைத்து பரிமாறப்படும் உணவு தான் ஷவர்மா. க்ரில் ஷவர்மா, ப்ளேட் ஷவர்மா என்றெல்லாம் இந்த உணவு 80 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி