World Lion Day 2024: உலக சிங்கங்கள் தினத்தின் முக்கியத்துவம் என்ன?.. அழிவின் விளிம்பில் இருக்கும் காட்டு ராஜாவின் கதை..!
Aug 10, 2024, 07:17 AM IST
World Lion Day 2024: உலகெங்கிலும் உள்ள சிங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலக சிங்கங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
World Lion Day 2024: சிங்கங்கள் பெரும்பாலும் உலகெங்கிலும் "காட்டின் ராஜா" என்று அழைக்கப்படுகின்றன. வீரத்தின் உதாரணமாக சிங்கத்தை இவ்வாறு குறிப்பிடுகின்றன. ஆனால், பூனை இனத்தை சேர்ந்த இந்த கம்பீரமான விலங்கு நமது சுற்றுச்சூழல் அமைப்புகளில் உள்ள பங்கு நமது பாதுகாப்பின் அவசியத்தை நினைவூட்டுகிறது.
உண்மையில் இந்த அற்புதமான விலங்கு காடுகளில் ஏராளமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. காடுகள் அழிப்பு, வேட்டையாடுதல் அச்சுறுத்தல்கள், மனிதர்களுடனான மோதல், காலநிலை மாற்றம், இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் சிங்கங்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.
அழிவின் விளிம்பில் இருக்கும் 'காட்டு ராஜா'
உலகில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை 2 லட்சத்துக்கும் மேல் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது வெறும் 20 ஆயிரமாக குறைந்துவிட்டது. அவற்றிலும் ஆசிய சிங்கங்கள் 500-க்கும் குறைவாகவே உள்ளன. இந்தியாவில் 2015-ல் 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு கணக்கின் படி 674 ஆக உள்ளது.
உலக சிங்கங்கள் தினம் வரலாறு
முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் சிங்கங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அங்கீகாரம் பெற்ற சரணாலயமான பிக் கேட் ரெஸ்க்யூவால் நிறுவப்பட்டது. மேலும் இது டெரெக் மற்றும் பெவர்லி ஜூபர்ட் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் நோக்கம் குறைந்து வரும் சிங்கங்கள் மற்றும் காடுகளில் அவைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு கவனத்தை ஈர்க்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தது. உலகெங்கிலும் உள்ள சிங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலக சிங்கங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
முக்கியத்துவம் என்ன?
சிங்கங்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்புத் தேவைகள் மீது கவனத்தை ஈர்ப்பதன் மூலம் காடுகளில் உள்ள இந்த குறிப்பிடத்தக்க விலங்குகளின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான ஆதரவையும் நடவடிக்கையையும் திரட்டுவதில் உலக சிங்கங்கள் தினம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றைப் பாதுகாப்பதற்கான அவசரத் தேவை இருப்பதால், சுற்றுச்சூழல் அமைப்புகளில் சிங்கங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் கலாச்சார முக்கியத்துவம் குறித்து மக்களுக்குக் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் உள்ளூர் சமூகங்களை சிங்க பாதுகாப்பில் பங்கேற்க ஊக்குவித்தல் மற்றும் சிங்கங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே சகவாழ்வை ஊக்குவித்தல் போன்றவை இன்றைய நாளின் முக்கியமான அம்சமாகும்.
எப்படி கொண்டாடப்படுகிறது?
உலக சிங்கங்கள் தினத்தன்று, சிங்கங்களும் அவற்றின் தனித்துவமான குணங்களும் கலை, புகைப்படம் எடுத்தல் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மூலம் கொண்டாடப்படுகின்றன. அதே நேரத்தில் பல அமைப்புகள், வனவிலங்கு பாதுகாப்பு குழுக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தனிநபர்கள் நடவடிக்கைகள் மற்றும் பிரச்சாரங்களில் பங்கேற்கின்றனர். சிங்க பாதுகாப்பு திட்டங்கள், வேட்டையாடுதல் எதிர்ப்பு முயற்சிகள், வாழ்விட பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளுக்கு நிதி திரட்ட இந்த நாளைப் பயன்படுத்துகின்றனர். சிங்கங்கள், அவற்றின் நடத்தை, அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு உத்திகள் பற்றிய தகவல்களை வழங்க பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், பொதுப் பேச்சுக்கள் பெரும்பாலும் இந்த நாளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்