Oral Health: உங்கள் ஈறுகளின் நிறம் சொல்லும் செய்தி! நோய் பாதிப்புகளை தடுக்கும் வாய்வழி சுகாதாரம்
Jul 25, 2023, 02:26 PM IST
உங்கள் ஈறுகளில் வெளிப்படும் நிறம் உடலில் ஏற்பட்டிருக்கும் நோய் பாதிப்புகளின் அறிகுறியை வெளிப்படுத்துகிறது. வாய்வழி சுகாதாரத்தை நன்கு பேனி பாதுகாப்பதன் மூலம் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
பற்களின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கும் முக்கிய உறுப்பாக இருந்து வருகிறது ஈறுகள். மிகவும் மென்மையான, சிக்கலான திசுவாக இருந்து வரும் ஈறுகள், பற்களை சேதமடைவதை தடுப்பதோடு மட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியத்தின் நிலையையும் பிரதிபலிக்கிறது. உங்களது ஒட்டு மொத்த உடல் நல ஆரோக்கியம் பற்றி ஈறுகள் வெளிப்படுத்துகிறது என்றால் நம்பமுடிகிறதா? ஈறுகளில் வெளிப்படும் நிறங்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை விவரிக்கிறது.
ஆரோக்கியமாக இருப்பதை குறிக்கும் பிங்க் நிறம் முதல், ஆபத்தை குறிக்கு சிவப்பு வரை ஈறுகளின் நிறம் உடல் நல பாதிப்பு பற்றி தெளிவாக வெளிப்படுத்துகிறது.
ஈறுகளின் நிறங்கள் சொல்லும் செய்திகளை பார்க்கலாம்
பிங்க் நிறம்
ஆரோக்கியமான ஈறுகளை குறிக்கும் விதமாக இந்த நிறத்தில் தோன்றும். இதன் மூலம் உங்களது வாய்வழி, பற்களின் சுகாதாரம் சிறப்பாக உள்ளது என்பதை புரிந்து கொள்க. பிங்க் நிறமானது தேவைப்படும் அளவு ரத்த ஓட்டம், சரியான ஆக்சிஜனேற்றம், அழற்சி ஏற்பட வாய்ப்பு குறைவு போன்றவற்றை குறிக்கிறது.
உறுதியான ஈறுகள் இருந்தால், பல்துலக்கும்போது ரத்த கசிவு ஏற்படாது. இந்த நிறத்தில் ஈறுகள் இருந்தால் பற்களை தொடர்பான எந்த பிரச்னையும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டாலும், சீரான இடைவெளியில் மருத்துவரை தவறாமல் அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
வெளிர் அல்லது வெள்ளை நிற ஈறுகள்
ரத்த சோகை மற்றும் பிற அடிப்படை சுகாதார பிரச்னைகள் குறிக்கும் விதமாக ஈறுகள் இந்த நிறத்தில் தோன்றுகின்றன. ரத்த சோகையானது போதுமான அளவு சிவப்பு ரத்த அணுக்கள் இல்லாத காரணத்தால் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆக்சிஜன் அளவானது குறைகிறது.
உங்கள் ஈறுகள் தொடர்ந்து வெளிர் நிறத்தில் இருப்பதை கண்டால், பல் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனையின் பேரில் அடிப்படை பிரச்னையை கண்டறிந்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.
சிவப்பு அல்லது வீக்கமடைந்த ஈறுகள்
சிவப்பு, வீக்கமடைந்த ஈறுகள், ஈறுகளின் அழற்சிக்கு தொடர்புடையதாக உள்ளது. இது ஈறு தொடர்பான நோய்களுக்கான ஆரம்ப படிநிலையாக உள்ளது. மேசமான வாய்வழி சுகாதாரம் தான் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட பிரதான காரணமாக உள்ளது. பாக்டீரியாக்களை ஈறுகளில் குவிய செய்து, பிளேக் உருவாக்க அனுமதிப்பால் வீக்கமானது ஏற்படுகிறது. இதற்கு உரிய சிகிச்சை எடுக்கப்படாமல் இருந்தால் நோய் பாதிப்பு தீவிரமடையும். இதன் விளைவாக பற்களை இழக்க நேரிடும்.
அடர் சிவப்பு மற்றும் நீல நிற ஈறுகள்
போதுமான அளவில் ஆக்சிஜனேற்றம் மற்றும் சுழற்சி பிரச்னைகள் காரணமாக ஈறுகள் இந்த நிறத்தில் தோன்றுகிறது. அத்துடன் இந்த நிறமாற்றமானது இருதயம், சுவாசம் தொடர்பான பிரச்னைகளைாலும் ஏற்படுகிறது. எனவே மேற்கூறிய நிறத்தில் ஈறுகள் தோன்றினார் உடனடியாக மருத்துவரை தவறாமல் அணுகுங்கள்.
ஈறுகளில் பழுப்பு அல்லது கருப்பு நிறம்
தோல்களின் நிறமியாக இருந்து வரும் மெலலின் காரணமாக ஈறுகள் கருப்பு நிறத்தில் தோன்றலாம். இந்த நிலை பாதிப்பு இல்லாதது என்றாலும், கருமை நிறத்தில் இருப்பவர்களுக்கு பொதுவாக தோன்றும் நிலையாக உள்ளது. ஆனால் இந்த நிறத்தில் ஏதேனும் மாற்றத்தை கண்டால் மருத்தவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.
வருமுன் காப்பதே சிறந்தது. எனவே சிறந்த வாய்வழி சுகாதாரத்தை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் ஒட்டுமொத்த உடல் நல ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்