Special Vadai Recipes: சூப்பரான சத்தான சுவையான காராமணி வடை செய்வது எப்படி?
Jun 04, 2023, 03:49 PM IST
சூப்பரான சத்தான சுவையான காராமணி வடை செய்வது எப்படி என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
மசால் வடை, மெதுவடை, தவளை வடை, கீரை வடை, பாசிப்பயறு வடை என எத்தனையோ வகையான வடை கேள்விப்பட்டிருப்போம். காரமணி வடை கேள்விப்பட்டதுண்டா? இதோ உடனே செய்து குழந்தைகளுக்கு கொடுத்து குதூகலப்படுத்தலாம். இதன் சுவை அலாதியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேவையான ஊட்டச்சத்துகள் இதில் நிறைந்துள்ளன.
காராமணி வடை செய்யத் தேவையான பொருட்கள்:
காராமணி - 1 கப்
வரமிளகாய் - 2
சோம்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1 (பொடித்தது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு ஏற்ப
காராமணி வடை செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் காராமணியை போட்டு நீர் ஊற்றி ஐந்து நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கரகரவென்று அரைத்துக் கொள்ளவேண்டும்.
பின்பு அதனை ஒரு கப்பில் போட்டு, அதில் பெருங்காயத் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து கறிவேப்பிலையும் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து வாழை இலை அல்லது கையில் வைத்து லேசாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான காராமணி வடை தயார்.
டாபிக்ஸ்