Aloo chapathi and Kezhvaraku Dosa: ஆலு சப்பாத்தி - கேழ்வரகு தோசை செய்வது எப்படி?
Feb 02, 2024, 08:33 PM IST
இரவில் செய்து உண்ணக்கூடிய எளிமையான உணவுகள் குறித்து அறிந்துகொள்வோம்.
இரவில் யாசகனைப்போல் சாப்பிடு என்னும் ஒரு பழமொழி உண்டு. இரவில் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை உண்ணவேண்டும். இரவு 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது உடலுக்கு நன்மைதரக்கூடியது. இரவில் அரை வயிறு சாப்பிடுவது நல்லது என்று டயட் கவுன்சிலர்கள் கூறுகின்றனர்.
இரவில் நூடுல்ஸ், பரோட்டா, வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட்கள், கூல் டிரிங்ஸ் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இத்தகைய உணவுகள் அஜீரணம் மற்றும் மலச்சிக்கலை உண்டு செய்யும்.
இரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு என்பது இன்றைய காலத்தில் உரிய ஊட்டச்சத்துமிக்க உணவாகும். இரவு நேரத்துக்கு ஆலு சப்பாத்தி மற்றும் கொத்தமல்லி சட்னி சிறந்த உணவாகும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ¼ கிலோ;
வெண்ணெய் - 2 டீஸ்பூன்;
உப்பு - தேவையான அளவு;
உருளைக்கிழங்கு - 3;
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவிட்டு தோல் உரித்து நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, வெண்ணெய், மிளகாய்த்தூள் சேர்த்துத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.
இதைச் சப்பாத்திகளாகத் தட்டி, தோசைக் கல்லில் போட்டு சுட்டெடுத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி சட்னி: கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை நன்கு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின், கடுகினை தாளித்து கொத்தமல்லி சட்னியில் ஊற்றிக்கொள்ளவும்.
அதேபோல் கேழ்வரகு தோசையினை எளிதாக செய்யலாம். இதுவும் இரவுநேரத்துக்கு ஏற்ற ஒரு உணவாகும்.
தேவையானவை:
கேழ்வரகு மாவு - ¼ கிலோ;
கடுகு - சீரகம்: ஒரு டீஸ்பூன்;
உப்பு - தேவையானவை;
பெருங்காயத்தூள் - சிறிதளவு;
எண்ணெய் - 100 மி.லி
செய்முறை: கேழ்வரகு மாவுடன் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள்,கடுகு சேர்த்துத் தாளித்து, தோசைமாவுப் பதத்தில் நீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மிதமான வெப்பத்தில் தோசை மாவை அதனுள் ஊற்றவும். பின் இருபுறமும் எண்ணெய்விட்டு தயார் ஆனதும் உண்ணவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்